(26-4-2025 முதல் 25-11-2026 வரை)
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)
குடும்பம்: தனுர் ராசி "தினகரன்" வாசக அன்பர்களுக்கு, கும்ப ராசியில் இணைந்துள்ள, சனி - ராகுவினால், அடுத்துவரும் சுமார் 18 மாதங்களுக்கு பல நன்மைகள் ஏற்படும் எனப் புராதன ஜோதிட நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. குடும்பச் சூழ்நிலை, மன-நிறைவைத் தரும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சித்திரை 28 (11-5-2025) அன்று மிதுன ராசிக்கு மாறும், குரு பகவானின் சுபப் பார்வை, சனி - ராகுவிற்குக் கிடைப்பது, மேலும் சிறந்த யோக நற்பலன்களை அளிக்கும். குடும்பத்தில் சுப-நிகழ்ச்சிகள் நிகழும். விவாக முயற்சிகளில், நல்ல வரன் அமையும். திருமணமாகி, பல வருடங்களாக ஏங்கிக் காத்திருந்த பலருக்கு மழலைப் பாக்கியம் கிட்டும். அந்நிய நாட்டில் வேலையிலிருந்துவரும் பெண் அல்லது பிள்ளை அல்லது மாப்பிள்ளையின் வருகை, குடும்பத்தில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். குறிப்பாக, வேலைக்கு முயற்சித்துவரும் பெண் அல்லது பிள்ளைக்கு மனதிற்குப் பிடித்த நிறுவனத்தில் பணி உத்தரவு கிடைக்கும்.
உத்தியோகம்: உலகில் பிறந்த அனைவருக்கும் உத்தியோகக் காரகர் (ஜீவன காரகர்) சனி பகவான்தான்! அவர் உயர்ந்த சுப பலத்துடன், ராகுவுடன் சேர்ந்து சஞ்சரிப்பது, வேலையில் சிறந்து முன்னேற்றம் ஏற்படுவதை, உறுதிசெய்கிறது. பலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும், புதிய சலுகைகளுடன் இடமாற்றமும் ஏற்படும். வெளிநாடு செல்லும் ஆர்வம் இருப்பின், அது நிறைவேறும். அலுவலகத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தற்காலிகப் பணியில் உள்ள ஊழியர்கள், அவரவரது பணிகளில் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
தொழில், வியாபாரம்: இவ்விரு துறைகளுமே, சனி பகவானின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ராகுவும் - சனியும் நட்புக் கிரகங்களாவர். இவ்விருவரும், கும்ப ராசியில் சேர்ந்திருப்பது, தொழில் மற்றும் வியாபார அபிவிருத்திக்கு உதவும். போட்டிகளின் தீவிரம் குறையும். சந்தை நிலவரம் சாதகமாக மாறும். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். புதிய விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு ஏற்ற தருணம் இது!
கலைத் துறையினர்: சனி - ராகு இருவரும், சனி பகவானின் ஆட்சி வீடான கும்பத்தில் இணைந்திருப்பது உங்கள் ராசிக்கு, "ஹம்ஸ யோகம்" ஆகும் எனக் கூறுகிறது, "ஜோதிட பாரிஜாதம்" எனும் புராதன கிரந்தம். அற்புதமான இந்நூல், கிரக சஞ்சாரங்களைப் பற்றிய பல சூட்சும ரகசிய அம்சங்களை விவரிக்கிறது. இசைக் கலைஞர்கள், பரத நாட்டியப் பெண்மணிகள், ஆன்மிக உபன்யாசகர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு சிறந்த யோக பலன்கள் ஏற்படும் நேரமாகும். ஒரு சிலர், வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் கிட்டும்.
அரசியல் துறையினர்: உங்கள் பேச்சுத் திறமைகளையும், சமயோஜித ஆற்றலையும், பிரகாசிக்கச் செய்வார்கள், சனியும் ராகுவும்! மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவு, உற்சாகத்தை ஏற்படுத்தும். உங்கள் ஒருவரது தனி முயற்சியினால், பல பிறகட்சித் தொண்டர்கள், நீங்கள் உள்ள அரசியல் கட்சியில் சேர்வர், உங்கள் மீதுள்ள அபிமானத்தினால்! ஒருசிலருக்கு புதிதாக தனிக் கட்சி ஒன்றை உருவாக்கும் வாய்ப்பும் கிட்டும்.
மாணவ - மாணவியர்: படிப்பில் ஆர்வம் மிகும். உற்சாகம் மேலிடும். நினைவாற்றல் அதிகரிக்கும். நற்குணங்களும், நற்சிந்தனைகளுடன் கூடிய நல்லொழுக்க, பழக்க - வழக்கங்களும் உள்ள மாணவர்களின் சேர்க்கை ஏற்படும். வெளிநாடு சென்று, "செயற்கை அறிவு" (Artificial Intelligence) போன்ற தனிச் சிறப்பு வாய்ந்த துறையில் படிப்பதற்கு வழிவகை செய்வார்கள், உங்கள் ராசிக்கு சுப பலம் பெற்றுள்ள சனியும், ராகுவும். தைரியமாக அனுப்பி வையுங்கள்! "மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்!" எனும் வள்ளுவப் பெருந்தகையின் சொல்லிற்கேற்ப, புகழ் சேரும்!! இதை அனுபவத்தில் காணலாம்.
விவசாயத் துறையினர்: உழைப்பிற்கேற்ற விளைச்சலைத் தருவதற்குத் தயங்கமாட்டார்கள் ராகுவும் - சனி பகவானும்!! அவர்கள் இருவரும் உங்களுக்கு உதவிகரமாக அமைந்திருப்பதால், நல்ல விளைச்சலைப் பெற்றுத் தருவார்கள். பலருக்கு, நவீன விவசாய வசதிகள் கிடைக்கும். மோட்ச காரகரான கேதுவினால், கால்நடைகளின் பராமரிப்பில் செலவுகள் அதிகரிக்கும்.
பெண்மணிகள்: கும்ப ராசி, தனுர் ராசியினருக்கு, சுப பலன்களை அளிக்கக்கூடிய ராசியாகும். அங்கு ஏற்பட்டுள்ள சனி - ராகு சேர்க்கை மிகவும் அனுகூலமான கிரக இணைப்பாகும். குறிப்பாக, வேலைக்குச் சென்று வரும் தனுர் ராசிப் பெண்மணிகளுக்கு, லாபகரமான காலகட்டமாகும். உங்கள் முயற்சிகள், எதிர்காலத்திற்கான திட்டங்கள் ஆகிய அனைத்திலும் வெற்றி கிட்டும். பூர்வீகச் சொத்துக்கள், சம்பந்தமான பிரச்னைகள் நீதிமன்ற வழக்குகள் ஆகியவை உங்களுக்குச் சாதகமாக முடியும்.
அறிவுரை: சனி பகவானும், ராகுவும் கொடுப்பதில் கணக்குப் பார்ப்பதில்லை! எனக் கூறுகிறது, "பூர்வ பாராசர்யம்" எனும் ஈடிணையற்ற ஜோதிட நூல். இதனையே வற்புறுத்தி விளக்கியுள்ளது, விக்கிரமாதித்திய மன்னர் காலத்திய, "பிருஹத் ஸம்ஹிதை" என்னும் நூலும், இத்தகைய சேர்க்கை நம்முடைய பிறவியில் அரிதாகத்தான் நிகழும், ஆதலால், சனி - ராகு கொடுப்பதை சிக்கனமாகச் செலவு செய்தல் அவசியம். ஏற்படுத்தித் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள திருக்கோயிலுக்குத் தவறாமல் சென்று, தீபத்தில் சிறிது நெய் அல்லது எள் எண்ணெய் சேர்த்து, 12 தடவைகள் வலம் வந்து வணங்கினால் போதும். ஈடிணையற்ற தோஷ நிவர்த்தி சக்தியாகும். முடியாதவர்கள் இதனை உங்கள் வீட்டுப் பூைஜயறையில் செய்தாலும், அதே பலன்களைப் பெற்று மகிழலாம். லிகித ஜெபமாகக் கருதப்படும், "ÿராம ஜெயம்" நோட்டுப் புத்தகங்களில் 108 தடவைகள் எழுதி, உங்கள் பூஜையறையில் வைத்து, கற்பூர தீப ஆரத்தி காட்டி வணங்கி வந்தாலும் போதும்.