(26-4-2025 முதல் 25-11-2026 வரை)
(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)
குடும்பம்: கன்னி ராசி அன்பர்களுக்கு கும்ப ராசியில் ஏற்பட்டுள்ள சனி - ராகு சேர்க்கை பல நன்மைகளை அளிக்க உள்ளது. கேது ஜென்ம ராசியைவிட்டு விலகியதும், அனுகூலமான கிரக மாறுதலேயாகும். உங்கள் ராசிக்கு கும்பம் ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகும். நிதி நிலைமையில், படிப்படியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல மாதங்களாக மனதை அரித்துவந்த முக்கிய பிரச்னை ஒன்று நல்லபடி தீரும். பழைய கடன்கள் இருப்பின், அவை இப்போது தீர வழிபிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். கண்ணில் புரை பிரச்னை இருப்பின், உயர்ந்த சிகிச்சையில், பூரண குணம் ஏற்பட்டு, கண்பார்வை சரியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்னை ஒன்று சமரசத்தில் முடியும். அந்நிய நாட்டில் பணியாற்றி வரும் பிள்ளை அல்லது பெண்ணின் வருகை, குடும்பத்தில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேரும்.
உத்தியோகம்: உலகிலுள்ள அனைவருக்குமே, சனி பகவான்தான் உத்தியோகத்திற்கு அதிபதியாவார். அவர் ராகுவுடன் சேர்ந்து,சிறந்த சுப-பலம் பெற்று, சஞ்சரிப்பது சிறந்த யோக பலன்களைக் குறிக்கிறது. அலுவலகத்தில் அனைவரும் அனுகூலமாக நடந்துகொள்வார்கள். மேலதிகாரிகளின் ஆதரவு, பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பலருக்கு ஊதியம் உயரும். சலுகைகள் கூடும். வெளிநாடு சென்று, வேலை பார்த்து, பணம் ஈட்டவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு, ஆசை எளிதில் நிறைவேறும். அரசாங்க உத்தியோகம்தான் என்ற விருப்பம் உள்ளவர்கள், இம்மாதம் முயற்சித்தால், வெற்றி கிட்டும். வேலையில்லாதவர்களுக்கு, சிறுமுயற்சியிலேயே நல்லவேலை கிடைக்கும். வேறு நிறுவனத்திற்கு மாற விரும்பும் கன்னி ராசியினருக்கு, எண்ணம் நிறைவேறும். சம்பந்தப்பட்ட அனைத்து கிரகங்களும் சுப பலம் பெற்று, உங்களுக்கு ஆதரவாக உள்ளனர்.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறை, சனி பகவானின் அதிகாரத்தில்தான் உள்ளது. அவர் ராகுவுடன் சேர்ந்து, மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால், சந்தை நிலவரம் உங்களுக்குச் சாதகமாகவே நீடிக்கும். விற்பனை படிப்படியாக அதிகரிப்பதை அனுபவத்தில் காணலாம். புதிய முயற்சிகளிலும், விற்பனைக் கிளைகள் திறப்பதிலும் அளவோடு முதலீடு செய்யலாம். லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். வங்கி நிதியுதவி கிடைக்கும். வெளி மாநிலப் பயணங்கள் லாபகரமாக இருக்கும்.
கலைத் துறையினர்: சித்திரை 28 (மே 11, 2025)-லிருந்து, குரு பகவானின் பார்வை ராகு, மற்றும் சனி பகவானுக்குக் கிடைக்கிறது. கலைத் துறைக்கு அதிபதிகளான சுக்கிரன், புதன் ஆகியோர் சுப பலம் பெறுவதால், கலைத் துறை அன்பர்களுக்கு, யோக காலம் பிறந்துள்ளது என உறுதியாகக் கூறலாம். திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் துணிந்து புதிய தயாரிப்புகளில் முதலீடு செய்யலாம். படங்கள் அனைத்தும் சிறந்த லாபத்தைப் பெற்றுத் தரும்.
அரசியல் துறையினர்: சனி, ராகு ஆகிய இரு கிரகங்களுக்குமே, அரசியல் துறையுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால்தான், அரசியலில் வெற்றி பெற சாதுர்யம், சமயத்திற்கு ஏற்றாற்போல் வளைந்து கொடுத்தல், சாதுர்யமாகவும், கவர்ச்சிகரமாகவும் பேசும் திறன், தைரியம் ஆகியவை இன்றியமையாதவை என கௌடில்யரின், "அர்த்த சாஸ்திரம்" கூறுகிறது.தயை, தாட்சண்யம் பார்க்காமல், அரசியல் எதிரிகளைத் துடைத்தெறியும் சக்தி கொண்டவர்கள் ராகுவும் - சனி பகவானும். இவர்கள் இருவரும் உங்கள் ராசிக்கு பகை ஸ்தானமாகிய கும்ப ராசியில் சுப பலம் பெற்றுத் திகழ்வதால், கட்சியினரின் பூரண ஆதரவும், மக்களிடையே செல்வாக்கும், புகழும் ஓங்கும்.
மாணவ - மாணவியர்: உங்களுக்கு மட்டும் குறை வைப்பார்களா சனி பகவானும், ராகுவும்…? வித்யாகாரகரான புதனும் பெரும்பாலும் உங்களுக்கு ஆதரவாக வலம் வருவதால், படிப்பில் சிறந்து விளங்கச் செய்வார்கள் சனி பகவானும், ராகுவும். நிழற் கிரகமானாலும், ராகுவின் சக்தியும், வீர்யமும், சனி பகவானுக்கு நிகரானவை. உயர்கல்விக்கு சற்று தாராளமாகவே நிதியுதவியைப் பெற்றுத் தந்தருள்வார், ராகு! சனி பகவானும், தனது பங்கிற்கு உதவி செய்வார், இதனை அனுபவத்தில் பார்க்கலாம். வெளிநாடு சென்று, பிரத்தியேக உயர்கல்வி பெற ஏற்ற தருணம் இது.
விவசாயத் துறையினர்: வயலைப் பார்த்தாலே உணர்ந்து கொள்வீர்கள், ராகு - சனி பகவானின் சஞ்சார நிலை எந்த அளவிற்கு உங்களுக்கு உதவியுள்ளது என்பதை! பயிர்கள் செழித்து வளரும் காட்சி, மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். பலருக்கு புதிய விளை நிலமும், பசுக்கள், கன்றுகள் வாங்கும் யோகமும் ஏற்படும். அரசாங்க உதவியும், சலுகைகளும் கிட்டும்.
பெண்மணிகள்: உங்கள் ராசிக்கு, "ரோக" ஸ்தானமாகிய கும்ப ராசியில் ஏற்பட்டுள்ள, சனி - ராகு சேர்க்கை, உங்கள் உடல்நலனில் சிறந்த முன்னேற்றத்தை அளிக்கவுள்ளது. மனதையும், உடலையும் பாதித்துவந்த மாதவிடாய்க் கோளாறுகள், கர்ப்பப்பைப் பிரச்னைகள், ஒற்றைத் தலைவலி, கை - கால்களில் இருந்துவந்த மூட்டுவலி ஆகியவற்றிற்கு மிக நல்ல சிகிச்சை கிடைக்கும்படிச் செய்வார்கள், சனி பகவானும், ராகுவும். கடன்கள் இருப்பின், அவை அடைபடும்.
அறிவுரை: கொடுப்பதில் தன்னிகரற்ற சனியும் - ராகுவும் ஒன்றுசேர்வது அதிலும் அனுகூலமான ராசியில் சேர்வது மிகவும் அபூர்வம். அந்த அரிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது இப்போது இவ்விரு கிரகங்களும் சற்று தாராளமாகவே கொடுப்பதை உங்கள் எதிர்காலத்திற்காகவும், உங்கள் குழந்தைகளுக்காகவும் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். வரும்போது வாரி இறைத்துவிட்டு, பின்பு வருந்தக் கூடாது! மறவாதீர்கள்!! சிற்றெறும்பு நமக்குப் பாடம் போதிக்கிறது. மழைக் காலத்திற்காக, கோடையிலேயே சேமித்து வைத்துக் கொள்கிறது.
பரிகாரம்: கேதுவிற்கு மட்டும் பரிகாரம் செய்வது நல்லது. கேதுவிற்கு, "மோட்ச காரகர்" எனவும், முக்தியளிப்பவர் என்றும்தனிப் பெருமை உள்ளது. ஜனன கால ஜாதகங்களிலும், கோள் சாரத்திலும் கேது அனுகூலமற்ற நிலையில் சஞ்சரித்தாலும்கூட, கடினமான சிரமங்களை விளைவிக்கமாட்டார் என கூறுகின்றன, ஜோதிட பாரிஜாதம், மற்றும் "பூர்வ பாராசர்யம்" -எனும் மிகப் பழைமையான வட மொழி நூல்கள். பரிகாரத்திற்கு, கேதுவை செவ்வாயாகக் கருத வேண்டும் எனக் கூறுகிறது, "பரிகார ரத்னம்"முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருத்தல தரிசனம் நல்ல பலனையளிக்கும். செவ்வாய்க்கிழமைகளில் ஏழை ஒருவருக்கு உணவளிப்பதும் நன்மை செய்யும்.