(சனிப் பெயர்ச்சி 29-3-2025)
எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் மிதுன இராசி அன்பர்களே! பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாடின்றி இருக்கும். உங்களது உழைப்பால் மற்றவர்களை வாழவைப்பீர்கள். யார் உங்களிடம் வாக்கு கொடுத்தாலும் அதன்படி அவர்கள் நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவதில் வல்லவர் நீங்கள்.
எப்படி இருக்கப் போகிறதுஇந்த சனிப்பெயர்ச்சி
கிரகநிலை: இதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
பலன்: உங்களுடைய தொழில் ஸ்தானத்திற்கு மாறியிருக்கும் சனியால் பலம் பெறுவீர்கள். இதன் மூலம் பல விதமான நற்பலன்களை அடையப் போகிறீர்கள். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்னைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். சுப காரியம் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும்,
பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். தொலைதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும்.விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது; அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். புழு, பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கும் சிறு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தர மாட்டார்கள். உப தொழில்களிலும் கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகள் வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பும், புத்தி சாதூர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வால் மக்களுக்கு நன்மைகள் செய்து மனம் மகிழ்வீர்கள்.கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த சனி பெயர்ச்சியால் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்பு நீங்கும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து உங்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்.
திருவாதிரை: இந்த பெயர்ச்சியால் அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்துக் கொள்வீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம்.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்: இந்த பெயர்ச்சியால் உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். தொகுதியில் மதிப்பு கூடும். கோஷ்டிப் பூசலையும் தாண்டி சாதிப்பீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீ ரங்கம் சென்று ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்து வர நன்மைகள் கிடைக்கும்.
சிறப்பு பரிகாரம்: துளஸியை பறித்து அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு அர்ப்பணித்து வணங்கவும். சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9.
அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், புதன், சுக்கிரன்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு.அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.