01-01-2025 முதல் 31-12-2025 வரை
(புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)
தாய்மை உணர்வு மிக்க கடக ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்கள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். 14-4-2025 வரை குரு பகவான் 11 ல் இருப்பதால் நீண்ட நாள் ஆசைகள், லட்சியங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் வெற்றி உண்டு. 14-4-2025 க்கு பிறகு குரு பகவான் 12ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்கள், மருத்துவ செலவினங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.29-3-2025 வரை சனி பகவான் அஷ்டம சனியாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை, மறைமுக எதிர்ப்புகள் வந்து சரியாகும். 29-3-2025க்கு பிறகு அஷ்டமச்சனி விலகி சனிபகவான் 9 ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த பிரச்னைகள், தடைகள் நீங்கும். வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும். இழந்ததை மீண்டும் பெறுவீர்கள். 18-5-2025 வரை ராகு கேது பகவான் முறையே 9-3ல் இருப்பதால் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். 18-5-2025 க்கு பிறகு 8-2 முறையே ராகு கேது பகவான் சஞ்சரிப்பதால் தடைகள், பிரச்னைகள் வந்து நீங்கும். பேச்சில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரிகளுக்கு புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். இருப்பினும் எதிலும் ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய புதிய வேலை மாற்றமும் உண்டு. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் உறவு சுமூகமாக மாறும்.அரசியல்வாதிகளுக்கு தலைமையிடம் இருந்த பிரச்னைகள் நீங்கும். இருப்பினும் எந்த விஷயத்தையும் பொறுமையாக கையாளுங்கள்.கலைத்துறையினருக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கும். வருகிற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதியை திங்கட்கிழமையில் சென்று வழிபட்டு வர எல்லா பிரச்னைகளும் தீரும்.