01-01-2025 முதல் 31-12-2025 வரை
(பூரட்டாதி 4 ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக அமையும். 14-4-2025 வரை குரு பகவான் 3ல் சஞ்சரிப்பதால் மனதில் பயம், எதிர்காலம் பற்றிய கவலை, சுய சந்தேகம் வந்து நீங்கும். 14-4-2025க்கு பிறகு குரு பகவான் 4ல் சஞ்சரிப்பதால் தாய் உடல்நிலை பாதிப்பு, உறவுகளால் மனக்கசப்பு, சொத்து தொடர்பான பிரச்னை உண்டாகும். வாகன பயணங்களில் கவனம் தேவை.18-5-2025 வரை ராகு கேது பகவான் முறையே 1-7ல் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம், எதிர்மறை சிந்தனை, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். 18- 5- 2025க்கு பிறகு ராகு கேது பகவான் முறையே 12-6ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுதல், மனம் தெளிவு பெறுதல், எதிரிகளை வெல்லும் ஆற்றல், வழக்கு விஷயங்களில் வெற்றி, பொருளாதாரம் மேன்மை உண்டாகும்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் முன்னேற்றமுண்டு. ஓரளவு நல்ல லாபம் தரும். இருப்பினும் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.உத்யோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். பதவி உயர், ஊதிய உயர்வு தாமதம் ஆகலாம். பொறுமை தேவை.மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். படிப்பில் கவனம் தேவை. தேவையற்ற நட்பில் இருந்து விலகி விடுங்கள்.அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வதும், சகாக்களை கவனமாக கையாளுவதும் நல்லது. மக்களை அணுகும் போது கவனம் தேவை.கலைத்துறையினர் தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள், புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம்.பொருளாதார நிலை உயர்ந்து வாழ்வு வளம்பெறும்.
பரிகாரம்: திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும்.