01-01-2025 முதல் 31-12-2025 வரை
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 ம் பாதம்)
சிந்தனையை விட செயலே முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படும் மேஷ ராசி அன்பர்களே,இந்த வருடம் உங்களுக்கு புது அனுபவத்தை தரும். 14-5-2025 வரை குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருளாதார நிலை உயர்வு, பேச்சில் வசீகரம் தரும் குருபகவான் அதன் பிறகு 3ல் சஞ்சரிப்பதால் சுய சந்தேகம், எதிர்காலம் பற்றிய பயம், எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். விடாமுயற்சி ஒன்றே வெற்றி தரும் என்பதை உணரும் காலம் ஆகும். 29-3-2025 வரை 11ல் சஞ்சரித்து பல வகையில் லாபம், முன்னேற்றம், பொருளாதார உயர்வு தந்த சனிபகவான் 29-3-2025க்கு பிறகு முதல் உங்கள் ராசிக்கு 12ல் ஏழரை சனியாக சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வீடு வாகனம் சொத்து போன்ற விஷயங்களில் பணத்தை முதலீடு செய்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 18-5-2025 முதல் ராகு-கேது முறையே 11-5ல் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வராது என்று இருந்த பணம் வந்து சேரும். எந்த விஷயத்திலும் ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. மன குழப்பம் வந்து நீங்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. புதிய முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய பொறுப்புகள் வந்து சேரும்.கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம்: பழனி முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபட வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.