(அஸ்வினி,பரணி,கார்த்திகை 1ம் பாதம்)
எதிலும் துணிச்சலுடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வருடம் முழுவதுமே சனிபகவான் உங்கள் ராசிக்கு 12 ல் ஏழரை சனியாக சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை. யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர்கள் நண்பர்களை முழுமையாக நம்ப வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எந்த விஷயத்தையும் நாசூக்காக கையாளுங்கள். மறைமுக சூழ்ச்சிகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம்.14-5- 2025 முதல் குருபகவான் 3 ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் தடை தாமதம் ஏற்படும். விடாமுயற்சி ஒன்றே வெற்றி தரும். சகோதர வகையில் அதிக கவனம் தேவை. தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். எதிர்காலம் பற்றிய பயம் சந்தேகம் வர வாய்ப்புள்ளதால் மனதில் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.18- 5- 2025 முதல் ராகு கேது பகவான் முறையே 11,5 ல் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். ஏழரைச் சனி நடக்க இருப்பதால் எதிலும் அகல கால் வைக்க வேண்டாம். குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. வியாபாரிகளுக்கு புதிய வியாபார முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கவனமாக கையாளுங்கள்.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பதவி உயர்வு ஊதிய உயர்வு தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. சகாக்களை கவனமாக கையாளுங்கள். கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம்: திருத்தணி முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்.