(உத்திராடம் 2ஆம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ஆம் பாதம் வரை)குடும்பம்: புத்தாண்டில் முதல் மூன்று மாதங்கள் கிரகநிலைகள் சுமாராகவேதான் உள்ளன. மார்ச் 29ஆம் தேதி ஏழரைச் சனிக் காலத்தில், ஜென்மச் சனி முடிகிறது! இந்த மாறுதல், மிகச் சிறந்த கிரக சஞ்சார நிலையாகும். ஏழரைச் சனியின் ஐந்து வருடங்கள் முடிந்து, கடைசி பகுதியான இரண்டரை வருடங்கள் நடைபெறும்போது, ஐந்து வருடக் காலங்கள், பட்ட துன்பங்களுக்கு ஆறுதலாக, பெரிய அளவில் ஓர் நன்மை செய்வதாக சனி பகவான், ஸ்ரீகிருஷ்ணா அவதாரத்தில் பகவானிடத்தில் வாக்களித்திருக்கின்றார். நடைமுறையிலும், இதனைக் கண்டு வருகிறோம். சனி பகவானின பீடிப்பால், ஐந்து வருட காலம் பலவிதங்களிலும் சோதனைகளுக்கு நீங்கள் ஆட்பட்டிருக்கக்கூடும். அதற்கு ஈடாக உங்களுக்கு ஓர் உயர்ந்த நன்மையை இந்த இரண்டரை வருடக் காலத்தில் செய்ய இருக்கிறார். ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். ஏப்ரல் 23ஆம் தேதி திருதீய ஸ்தானத்திலுள்ள குரு பகவானும், மேஷத்திற்கு மாறுவது பணம் விரயமாவதைக் குறைக்கும். உத்தியோகம்: ஜென்மச் சனி நீங்கிவிட்டதால், அலுவலகத்தில் ஏற்பட்டுவந்த பிரச்னைகள் இனி விலகிவிடும். மேலும், அக்டோபர் 18ஆம் தேதி ராகுவும், கேதுவும் சுப பலம் பெறுவதால், பல நன்மைகள் ஏற்படும். பலருக்கு அவரவர்களது பாக்கிய, ஜீவன, லாபஸ்தானங்களின் அடிப்படையில் பதவியுயர்வும், சம்பள உயர்வும் கிடைப்பது உறுதி. தொழில், வியாபாரம்: ஏப்ரல் 23ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 23ம் தேதி வரை தொழில் மற்றும், வியாபாரத்தில், வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்படும். தொடர்ந்து, லாபம் கிடைக்கும். சந்தை நிலவரம் அனுகூலமாக மாறும். ஏற்றுமதி, இறக்குமதித் துறையினருக்குக்கூட, வெளிநாடுகளில் தற்போது நிகழும் நெருக்கடியான சூழ்நிலை குறைந்து, அனுகூலமாக மாறும். இதனை அனுபவத்தில் காணலாம். புதிய விற்பனைக் கிளைகள் ஆரம்பிப்பதற்கும், அனுகூலமான ஆண்டு இது. டிசம்பர் 31ஆம் தேதிவரை வியாபார முன்னேற்றம் நீடிப்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன. பயன்படுத்திக்கொள்ளுங்கள்.கலைத்துறையினர்: கலைத்துறைக்குச் சம்பந்தப்பட்ட கிரகநிலைகள் அனைத்தும் ஜனவரி 1ஆம் தேதி 2023 முதல் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை மிகவும் அனுகூலமாக உள்ளதால், திருக்கோயில் நாதஸ்வர வித்வான்கள், ஓதுவா மூர்த்திகள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் சிறந்த முன்னேற்றத்தைப் பெறுவார்கள். ஆகஸ்ட் 24ஆம் தேதியிலிருந்து, நவம்பர் 2ஆம் தேதி வரை சிறு பின்னடைவு ஏற்படும். அந்த மாதம் மூன்றாம் தேதியிலிருந்து, டிசம்பர் 31ஆம் தேதி வரை மீண்டும் பிரகாசமான காலகட்டமாகும்.அரசியல் துறையினர்: இவ்வருடம் 2023, ஜனவரி 1ஆம் தேதி முதல், மே 7ஆம் தேதி வரை அரசியல் துறைக்கு அதிகாரம் படைத்த கிரகங்கள் சுப பலம் பெற்றுள்ளன. அதனால், கட்சியில் உங்களுக்கு ஆதரவு பெருகும். அக்டோபர் 18ஆம் தேதியிலிருந்து வீண்பழி நீங்கும். ஆண்டு முடியும் வரை கட்சியில் ஆதரவு குறையாது.மாணவ-மாணவியர்: ஜென்மச் சனியிலிருந்து விடுபடவுள்ள உங்களுக்கு வித்யாகாரகரான புதன், செப்டம்பர் மாதம் 7ம் தேதிவரை சாதகமாக சஞ்சரிக்கின்றார். பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். வெளிநாடு சென்று உயர் கல்வி பயில் வதற்கு வாய்ப்புகள் கிட்டும்.விவசாயத் துறையினர்: ஆண்டின் ஆரம்ப தினத்திலிருந்து, ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை விவசாயத் துறைக்கு ஆதிபத்யம் கொண்டுள்ள கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமாக அமர்ந்துள்ளன. நல்ல விளைச்சலும், வருமானமும் கிட்டும். பழைய கடன்கள் அடைபடும். ஆகஸ்ட் 24ஆம் தேதியிலிருந்து, வருடம் முடியும் வரையில், தேவைக்கு அதிகமான மழையினால் பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. கால்நடை பராமரிப்பிலும் பணம் விரயமாகும்.பெண்மணிகள்: 2023ஆம் ஆண்டு, மார்ச் 29ஆம் தேதி ஜென்மச் சனி முடிவதே பெண்மணிகளுக்கு இந்த ஆங்கிலப் புத்தாண்டு அளிக்கும் பரிசாகும்! ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருந்தால் போதும். அறிவுரை: கிரகநிலைகளின் அடிப்படையில் இப்புத்தாண்டில் நன்மைகளே அதிகமாக இருக்கும். கிரக நிலைகள் அளிக்கும் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.பரிகாரம்: தினமும் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம், திருவாசகம், ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரம் ஆகியவற்றில் எவை முடிகிறதோ, அவற்றைப் படித்து வந்தால் நல்ல பலன் கிட்டும். பெண்கள், ஸ்ரீஅபிராமி அந்தாதி, ஸ்ரீமீனாட்சி பஞ்சரத்னம், ஸ்ரீலட்சுமி அஷ்டோத்ரம் ஆகியவற்றைப் படித்துவந்தால் போதும்….
80