(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)குடும்பம்: பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் சிறந்த சுபபலம் பெற்று நிலைகொண்டுள்ள தருணத்தில், சுபகிருது புத்தாண்டு பிறக்கிறது! ஆண்டு முழுவதும், அவரது ஆட்சிவீடான மீனராசியிலேயே சஞ்சரிக்கின்றார். வருமானத்திற்குக் குறைவிராது. குடும்பச் சூழ்நிலை, மகிழ்ச்சியை அளிக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் பெருமை தரும். வாக்கு ஸ்தானத்தில் ராகு இருப்பதால், தனது சக்திக்கு மீறிய வாக்குறுதிகளை அளிக்காமலிருப்பது மிகவும் அவசியம். மேலும், குரு கொடுப்பதை ராகுவின் நிலையினால் விரயமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஜென்மராசியை குரு பார்ப்பதால், ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குருவின் சுபப் பார்வை கிடைப்பதால், தீர்த்த தல யாத்திரை ஒன்று சித்திக்கும். நீண்ட நாட்களாகக் குடும்பத்தை வருத்திவந்த பிரச்னை ஒன்று நல்லபடி தீரும். புதிய வஸ்திரம், ஆடை – ஆபரணங்கள் சேரும்! சுபச்செலவுகளில் பணம் விரயமானாலும், மனத்திற்கு நிறைவை ஏற்படுத்தும். உஷ்ண சம்பந்தமான பிணிகளால் உடல் உபாதைகள் ஏற்படும். சூரியன், ராகு சேர்க்கையினால், சரும சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். சப்தம ஸ்தானத்தில், சனி பகவான் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். சிறு உபாதையானாலும், மருத்துவரிடம் காட்டி, சிகிச்சை பெறுவது நல்லது.உத்தியோகம்: ஜீவன ஸ்தானத்தில் சூரியன் – ராகுவின் சேர்க்கை தோஷத்தை விளைவிக்கிறது. குறிப்பாக, கடகராசியில் பிறந்துள்ள, அரசாங்க ஊழியர்கள், தங்கள் பணிகளில் கவனமாக இருத்தல் அவசியம். சிறு தவறும், பெரிய பிரச்னையில் கொண்டுவிடக்கூடும். பெண் சக ஊழியர்களுடன் நெருங்கிப் பழகாமலிருத்தல் நல்லது! சுக்கிரனின் நிலை, அனுகூலமாக இல்லை! அலுவலகத்தில் பணியாற்றிவரும் ஒரு பெண்ணினால் உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படக்கூடும். ஆதலால்தான், இந்த அறிவுரையை வழங்கியிருக்கின்றோம். ஜோதிடம், தனது கணிப்பில் என்றும் தவறியதில்லை!! தொழில், வியாபாரம்: சந்தை நிலவரம் இந்த ஆண்டு முழுவதும் அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும் என கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆதலால், உற்பத்தியை அளவோடு வைத்துக்கொள்வது அவசியம். ராகுவின் நிலையும் இதனை உறுதிசெய்கின்றது. லாபம் ஒரே சீராக இருக்கும். புதிய முயற்சிகளையும், முதலீடுகளையும் தவிர்ப்பது விவேகமாகும். கூட்டாளிகளுடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். கொடுக்கல் – வாங்கலில் பகை ஏற்படும். நிதிநிறுவனங்கள் ஒத்துழைக்கும். கலைத்துறையினர்: கலைத்துறைக்கு அதிகாரம் படைத்த கிரகங்கள் அனுகூலமாக இல்லை! ஆதலால், இப்புத்தாண்டில் அளவோடு நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். புதிய வாய்ப்புகள் தேடிவரும். இருப்பினும், அவற்றால் கிடைக்கும் வருமானம் ஓரளவே திருப்தி தரும். வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும். முன்பிருந்த ஆடம்பர வசதிகளை இந்த ஆண்டில் நினைத்துப் பார்க்கவும் இயலாது!! ஏனெனில், தன ஸ்தானத்தில், சக்திவாய்ந்த ராகு நிலைகொண்டிருக்கிறார். கைப்பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழிக்கவும். கொடுக்கும் பொறுப்புதான் குருவிற்கு உண்டு! அதைக் காப்பாற்றிக்கொள்ளும் மனவுறுதி நமக்கு வேண்டும். ஆனால், ராகுவின் நிலை, பணவிரயத்திற்கு வழிவகுக்கும். பரிகாரம் அவசியம்.அரசியல்துறையினர்: கிரகநிலைகள் உங்களுக்கு அனுகூலமாக இல்லை! கட்சியில் எவரை நம்புவது? எவரைச் சந்தேகிப்பது? எனத் தெரியாமல், குழப்பத்தில் ஆழ்த்திவிடும் கிரக நிலைகள்!! சிலர் வழக்குகளில் சிக்கி, நீதிமன்றம் வரை செல்ல நேரிடும். தற்போதுள்ள கட்சியிலேயே நீடிப்பதா? அல்லது வேறு கட்சிக்கு மாறிவிடலாமா? என்ற மனப் போராட்டத்தில், கொண்டுவிடும். எதையும் தீர ஆராய்ந்து பார்த்து, முடிவெடுப்பது உங்கள் எதிர்கால நலனுக்கு உகந்தது!!மாணவ – மாணவியர்: இப்புத்தாண்டு முழுவதும் புதன், குரு ஆகிய இரு கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாகச் சஞ்சரிப்பதால், கல்வியில் தீவிர ஆர்வம் மேலிடும். கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் தேர்வுகளில் உயர்ந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கு உதவிகரமாக அமைந்துள்ளன. உங்கள் விருப்பத்திற்கேற்ப, உயர் கல்விக்கு இடம் கிடைக்கும். தேர்வுகளில் படித்ததை, மிகச் சரியாக, தெளிவாக எழுதுவதற்கு ஆற்றல் ஏற்படும். நேர்முகத் தேர்வுகளில், பலருக்கு நல்ல வேலை கிடைக்கும். விவசாயத் துறையினர்: வயல் பணிகளில் கடுமையான உழைப்பு இருக்கும். அடிப்படை வசதிகளுக்கு எவ்விதக் குறையுமிராது. இருப்பினும், உழைப்பிற்கும், எதிர்பார்ப்பிற்கும் ஏற்ற விளைச்சல் கிடைப்பது சற்று கடினம். கால்நடைகள் நோய்வாய்ப்படுவதால், பணம் விரயமாகும். எதிர்பார்த்திருந்த அரசாங்க உதவியும் சலுகைகளும் தக்க தருணத்தில் கிடைக்காது.பெண்மணிகள்: குடும்ப நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு அனுகூலமான ஆண்டு இது! திருமண வயதை அடைந்துள்ள பெண்மணிகளுக்கு நல்ல வரன் அமையும். உத்தியோகம் பார்க்கும் பெண்மணிகள் அலுவலகத்தில் பிற ஆண்களுடன் நெருங்கிப் பழகாமலிருத்தல் அவசியம் என்பதை சனி, மற்றும் சுக்கிரனின் நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. மற்றபடி, மேலதிகாரிகளினால் எந்தப் பிரச்னையும் இராது. அறிவுரை: திட்டமிட்டு செலவு செய்யுங்கள். எவருடனும் அளவிற்கு மீறி நெருங்கிப் பழகுவதை தவிர்க்கவும். வேலைப் பார்ப்பவர்கள், மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடந்துகொள்ளவும். பரிகாரம்: 1. சோளிங்கபுரம், அஹோபிலம், பூவரசங்குப்பம், சென்னையை அடுத்த சிங்கப் பெருமாள் கோயில் ஆகிய நரசிம்ம க்ஷேத்திரங்களில் ஒன்றிலாவது நெய்தீபம் ஏற்றிவைத்து,, தரிசித்துவிட்டு வந்தால் போதும்!2. சமயபுரம், புன்னைநல்லூர், காஞ்சி காமாட்சி, திருவானைக்கோயில் அகிலாண்டேஸ்வரி, நெமிலி பாலா திரிபுர சுந்தரி, மதுரை மீனாட்சி ஆகியோரில் ஏதாவது ஒரு அன்னையை நெய்தீபம் ஏற்றிவைத்து தரிசித்துவிட்டு வந்தால் ராகு மற்றும் சனி ஆகிய கிரகங்களினால் ஏற்படும் தோஷம் அடியோடு நீங்கி, நன்மைகள் ஏற்படும்….
382