மிதுனம்

Published: Last Updated on

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)குடும்பம்: பிரதான கிரகங்கள் அனைத்தும், இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்குச் சாதகமாகவே சஞ்சரிக்கின்றனர். லாபஸ்தானத்தில் சூரியன், ராகு மற்றும் புதன் ஆகியோரின் சேர்க்கை நன்மை செய்யும். ராகு இணைந்திருப்பதால், சூரியனின் சுப பலம் சற்று குறைந்தாலும், நன்மையே உங்களுக்குக் கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். திருமண முயற்சிகளில் பணம் விரயமாகும். ஆயினும், வரன் அமைவதில், தடங்கல்கள் ஏற்படும். சிலருக்கு, வீடுமாற்றம் உண்டு. நெருங்கிய உறவினரிடையே சிறு, சிறு வாக்குவாதங்களும் ஒற்றுமைக் குறைவும் ஏற்படக்கூடும். சூரியன் மற்றும் ராகுவின் நிலையினால், அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு எளிய சிகிச்சையினால் குணமாகும்.உத்தியோகம்: 10ல் குரு பதவியைக் குறைக்கும் என்றொரு முதுமொழி உண்டு! ஆனால், மிதுன ராசியினருக்கு, ஜீவனாதிபதியே குருபகவான்தான்!! ஆதலால், குருவினால் நன்மைகளே ஏற்படும். அஷ்டம ஸ்தானத்தில் சனி இருப்பது, நன்மை தராது என்றொரு பொதுக் கருத்தும் ஜோதிடத்தில் உள்ளது! 8 என்பது, ஆயுள் ஸ்தானமாகும். மிதுன ராசியினருக்கு, ஆயுள் ஸ்தானாதிபதியே சனிதான்!! அவ்விதமிருக்க, இந்த ராசியினருக்கு அவரால் எவ்விதம் பாதிப்பு ஏற்படும்? அலைச்சல் சற்று அதிகமாக இருப்பினும், அதன் மூலம் நன்மைகளே ஏற்படும் என்பது மகரிஷிகளின் வாக்காகும். சிலருக்கு,  நிறுவன மாற்றம் ஏற்படக்கூடும். தொழில், வியாபாரம்: போட்டிகளும் பொறாமைகளும் நீடித்தாலும், உங்கள் லாபத்தை அவை பாதிக்காது! கூட்டாளிகளுடன் கருத்துவேற்றுமை ஏற்பட்டு, பின்பு சமரசத்தில் முடியும். புதிய முயற்சிகளில் அளவோடு முதலீடு செய்யலாம். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாட்டுச் சந்தைகளின் கதவுகள் மீண்டும் திறக்கப்படும். லாபம் உயரும். காகிதம், புத்தகத் துறை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களுக்கு, லாபகரமான ஆண்டாகும்! வெளிநாட்டு வியாபார நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும் அசதியை ஏற்படுத்தினாலும், வியாபார அபிவிருத்திக்கு அவை உதவும். வெள்ளி, தங்க ஆபரணங்கள், வைரம் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகத் துறையினருக்கு, அனுகூலமான ஆண்டு இது. ஆண்டின் பிற்பகுதியில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை குறைவதால், விற்பனை சூடுபிடிக்கும்.கலைத்துறையினர்: கலைத்துறையைத் தன் பிடியில் கொண்டுள்ள சுக்கிரன், இந்த ஆண்டு முழுவதும், உங்களுக்குச் சாதகமாகவே சஞ்சரிக் கின்றார். கலைத்துறைக்கு ஆதரவாக நிற்பவர் புதன்! நல்ல கருத்துக்கள், கதைகள், வசனம் ஆகியவற்றை அளிப்பவர் கல்வித் துறைக்கு அதிபதியான புதன்தான்!! அவருக்கும், கலைத்துறைக்கும் நெருங்கிய தொடர்புண்டு!! ஆதலால், இப்புத்தாண்டில் எடுக்கும் திரைப்படங்கள் அனைத்தும் தரத்திலும், வசூலைப் பெற்றுத் தருவதிலும் தனிச்சிறப்பு பெற்று விளங்கும். இது ஒரு அரிய சந்தர்ப்பம், மிதுன ராசியில் பிறந்துள்ள கலைத்துறையினருக்கு!! ஜோதிடம் சுட்டிக்காட்டிடும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.அரசியல்துறையினர்: உங்கள் அரசியல் வாழ்க்கையில் அரியதோர் வாய்ப்பினை அளிக்கிறது இந்த சுபகிருது புத்தாண்டு! மேலிடத் தலைவர்கள் மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கை, நன்றி, அபிமானம் ஆகியவற்றின் காரணமாக, தோல்விமேல் தோல்விகளையே கண்டுவரும் கட்சி ஒன்றைப் பற்றிக்கொண்டுள்ள உங்களுக்கு, வேறு ஓர் கட்சிக்கு மாறும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவார்கள், அரசியல் துறைக்கு ஆதிபத்யம் கொண்டுள்ள கிரகங்கள்! இந்த மாற்றத்தை உங்களால் தவிர்க்க முடியாது!! இந்த மாற்றம், உங்கள் அரசியல் வாழ்க்கையை மாற்றியமைக்கவுள்ளது. இதனை அனுபவத்தில் பார்க்கலாம். ஜோதிடம் என்பது, வானியல், விஞ்ஞான, அறிவியல்பூர்வமான தன்னிகரற்ற கலையாகும். சந்தேகத்திற்கோ அல்லது கற்பனைகளுக்கோ அதில் இடமில்லை! இப்புத்தாண்டு உங்களுக்கு அளிக்கும் இவ்வாய்ப்பினை நழுவ விட்டுவிடாதீர்கள்!!மாணவ – மாணவியர்: கல்வித்துறைக்குப் பூரண அதிகாரம் பெற்றுள்ள புதன், எவ்விதத் தோஷமுமின்றி, இப்புத்தாண்டு முழுவதும் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கின்றார்! மற்ற கிரகங்களின் கோள்சார நிலைகளும், புதனின் கரங்களை வலுப்படுத்துகின்றன. ஆதலால், படிப்பில் மிகச்சிறந்த முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் திகழ்வீர்கள்!! வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பெறுவதற்கும், இந்த ஆண்டின் கடைசிப் பகுதியில் வாய்ப்புகள் உருவாகும்.விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை தங்கள் பிடியில் வைத்துள்ள கிரகங்களனைத்தும், சுபமான பாதைகளில் சஞ்சரிக்கின்றனர், இப்புத்தாண்டு முழுவதும்! அடிப்படை வசதிகளுக்கு, எவ்விதக் குறையுமிராது. மேகாதிபதி, புதன்! தான்யாதிபதி, சுக்கிரன்!! ஆதலால், அமோகமான விளைச்சலை நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்கள் விளைபொருட்களுக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்கும். லாபம் உயரும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை முழுமையாக அடைத்து, நிம்மதிப் பெருமூச்சுவிடுவீர்கள்! கால்நடைகள் சிறந்த அபிவிருத்தியை அடையும். விளைபொருட்கள் சிலவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் கிட்டும்.பெண்மணிகள்: அதிர்ஷ்டகரமான ஆண்டு இது என கிரகநிலைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன. குடும்ப நலன்களைக் காத்தருளும் பொறுப்பு குருவிடம் உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் அவர் சுபத்துவப் பாதையில் சஞ்சரிக்கின்றார். மேலும், பெண்களின் நலன்களுக்கு அதிகாரம் கொண்டுள்ள சுக்கிரனும், சுப பலம் பெற்றுள்ளார். பல நன்மைகள் பெண்மணிகளுக்கு, இப்புத்தாண்டில் ஏற்படவுள்ளன. திருமண வயதிலுள்ள கன்னியருக்கு மிக நல்ல வரன் அமையும். வேலைக்கு முயற்சித்துவரும் நங்கையருக்கு நல்ல வேலை கிடைக்கும்.அறிவுரை: சிக்கனமாகச் செலவு செய்யுங்கள். எதிர்காலத்திற்கென்று இந்த ஆண்டிலேயே சேமித்துவைத்துக்கொள்வது நல்லது.பரிகாரம்: 1. திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, சூரியனார்க் கோயில் ஆகியவற்றில் எவற்றை முடிகிறதோ அவற்றை தரிசித்துவிட்டு வரவும்.2. சனிக் கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவைத்துவிட்டு தரிசிப்பது அளவற்ற நற்பலனையளிக்கும். இயலாத அன்பர்கள் தங்கள் வீட்டுப் பூஜையறையிலேயே வழக்கமாக ஏற்றி வரும் தீபத்தோடு, சனிக்கிழமைகளில் மட்டும் மூன்று நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றிவருவது மிகச்சிறந்த பரிகாரமாகும்.  இந்த ஆண்டு முழுவதும் செய்து வருவது அளவற்ற நற்பலன்களையளிக்கும். முடியாவிடில், மூன்று மாதங்களுக்காவது செய்து வரவேண்டும். (ஆதாரம்: பூர்வஜென்ம நிர்ணய சாரம்)3. ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் மிகச் சிறந்த பரிகாரமாகும்….

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us