(19.6.2025 முதல் 25.6.2025 வரை)
சாதகங்கள்: ஐந்தாம் இடத்து அதிபதி (புதன்) ஐந்தாம் இடத்திலேயே ஆட்சி பெறுவது அற்புத அமைப்பு. அவரோடு சூரியனும் இணைந்து இருக்கின்றார். தன குடும்ப அதிபதி குரு ஐந்தில் இருப்பதும், அவர் லாபஸ்தானத்திற்கு உரியவராக இருப்பதும், உங்கள் ராசியைப் பார்ப்பதும் அற்புதமான அமைப்பு. பொதுவாகவே கும்ப ராசி நேயர்களுக்கு சிரமங்கள் பலவிதத்தில் குறையும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மூன்றில் சுக்கிரனும் இருப்பதால் வாழ்வில் சிரமங்கள் குறைந்து மகிழ்ச்சியை உணர்வீர்கள். கடன்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடைபடும். சேமிப்பும் சற்று அதிகரிக்கும். புதிதாக வீடு மனை வாங்கும் அமைப்பும் யோகமும் உண்டு. சில நன்மையான விஷயங்கள் உங்களைத் தேடி வரும்.
கவனம் தேவை: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஏழுக்குரிய சூரியன் இருக்கின்றார். அது சிறப்பான அமைப்பு அல்ல. அதோடு, ஜென்மத்திலேயே சனி ராகு இருப்பதும், ஏழாம் இடத்தினை கேது, செவ்வாய் பார்ப்பதும், குடும்ப உறவுகளை கவனமாகக் கையாள வேண்டியதன் அவசியத்தைச் சொல்வன. அவசரப்பட்டுப் பேசக்கூடாது. குடும்பத்தில் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனித்து, நிதானித்து பதில் சொல்வதன் மூலமாக இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்ளலாம்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகாமையில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். தாயாரையும் பெருமாளையும் மனப்பூர்வமாக வணங்குங்கள் மனக்குழப்பங்கள் மாறி மகிழ்ச்சி பெருகும்.