3.6.2023 முதல் 9.6.2023 வரை
சாதகங்கள்: ராசிநாதன் நீசமாக இருந்தாலும் பாக்கியத்தில் இருக்கிறார். அவர் ஏழுக்குரிய சுக்கிரனோடு இணைந்து இருக்கின்றார். குருவுக்கு கேந்திரத்தில் இருக்கின்றார் என்பதெல்லாம் சில சாதகமான அமைப்புகள். கணவன் மனைவி உறவுகள் அவ்வப்பொழுது உரசல்களோடு இருந்தாலும், அன்பும் ஆதரவும் மாறாமல் இருக்கும். ஏழாம் இடத்தில் புதன் சூரியன் இணைவதால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில்நுட்பம், பத்திரிகை, ஊடகத்துறையில் உள்ளவர்களுக்கு சில நல்ல திருப்பங்கள் தெரியும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும் குறைவு ஏற்படாது. சிக்கல்கள் தொல்லைகள் இருக்காது.
கவனம் தேவை: ராசிநாதன் பலக்குறைவு. செவ்வாய் நீசமடைந்து இருக்கிறார். உடல் நிலை அவ்வப்பொழுது சோர்வைத் தரும். ஜீரணக் கோளாறுகள், தலை சுற்றல், கண் நோய்கள், கால் வலி முதலிய ஆரோக்கியக் குறைவுகள் தலை தூக்கும். பித்தம் அதிகரிக்கும். நாலில் சனி இருப்பதால், சுகக்குறைவு ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. சில நேரங்களில் பொறுமையைச் சோதிக்கும். மேலதிகாரிகள் கசக்கிப் பிழிவார்கள். வாகனம் ஓட்டுவதில் கவனம் தேவை.
பரிகாரம்: வள்ளி தெய்வானையோடு கூடிய முருகப்பெருமானை வணங்குங்கள். தினம் காலையில் குளித்துவிட்டு இரண்டு நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.