(26-4-2025 முதல் 25-11-2026 வரை)
(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)
குடும்பம்: 7½ சனியின் ஆரம்பப் பகுதியில் உள்ள மீன ராசி அன்பர்களுக்கு, ராசி நாதனாகிய குரு பகவானும், அனுகூலமாக இல்லை! சனி பகவானுடன், தன ஸ்தானத்தில் ராகு சேர்ந்திருப்பதும், வருமானம் நல்லபடியாக இருந்தாலும், வீண் செலவுகள் அதிகமாகவே இருக்கும். திருதீய ஸ்தானத்தில், ராசி நாதன் சஞ்சரிப்பதால், கைப் பணம் எங்கே போயிற்று? -எனத் திகைக்கும் வண்ணம் செலவுகளில், கைப் பணம் கரையும். ராகுவும், சனியும் இணைந்திருப்பதால், சிறு காரியங்களுக்குக்கூட அதிக முயற்சியும், அலைச்சலும் உடல் உழைப்பும் தேவைப்படும். ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் அவசியம். இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பதும், விபத்துகளைத் தவிர்க்க உதவும். வயதில் பெரியவர்கள், குளியலறைக்குச் செல்லும்போது, ஜாக்கிரதையாக அடி வைத்து நடத்தல் நல்லது. கீழே விழுந்து, அடிபடுவதற்கு வாய்ப்புள்ளது. ஆபத்தான நாட்களை நமக்கு முன்கூட்டியே அறிவித்து, நம்மைப் பாதுகாக்கிறது, ஜோதிடக் கலை! விவாக முயற்சிகளில் ஏமாற்றமே மிஞ்சும். ராகுவின் தோஷத்தினால், உஷ்ண சம்பந்தமான பாதிப்பு சரும உபாதைகளை ஏற்படுத்தக் கூடும். பழைய கடன்கள் கவலையை அளிக்கும்.
உத்தியோகம்: வேலை பார்க்கும் இடத்தில், கவனமாக இருப்பது அவசியம். மேலதிகாரிகளின் கண்டிப்பு, கவலையை அளிக்கும். பணிகளில் வெறுப்பு தோன்றும். சக-ஊழியர்களின் மறைமுகப் பேச்சுகள் வேதனையை அளிக்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகப் பொறுப்புகள் காரணமாக, வெளியூர்களுக்குச் செல்லும்போது, ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். விரய ஸ்தானத்தில் சனி – ராகு சேர்ந்தால், பொருட்கள் களவு போகக்கூடும் என “பூர்வ பாராசர்யம்” எனும் மிகப் புராதன ஜோதிட நூல் கூறுகிறது.
தொழில், வியாபாரம்: மிகக் கடுமையான போட்டிகளைச் சந்தையில் நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். சகக் கூட்டாளிகளுடன் கருத்து வேற்றுமையும் ஏற்பட வாய்ப்புள்ளதை, கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. மேலும், கடுமையான நிதிப் பற்றாக் குறையையும் நீங்கள் சமாளித்தாக வேண்டியிருக்கும். புதிய முதலீடுகள். விஸ்தரிப்புத் திட்டங்கள் ஆகியவற்றை ஒத்திப்போடவும். ஏற்றுமதி – இறக்குமதித் துறையினருக்கு, வெளிநாட்டு பயணம் ஒன்று ஏமாற்றத்தில் முடியும்.
கலைத் துறையினர்: வாய்ப்புகள் தடைபடும். வருமானமும் சற்று குறையும். திரைப்படத் துறையினருக்குக் கடும் நிதி நெருக்கடி ஏற்பட சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. சனியின் நிலை, வீண் அலைச்சலை ஏற்படுத்தும்.
அரசியல் துறையினர்: கிரக நிலைகள் சாதகமாக இல்லை. கட்சியில் செல்வாக்கு குறையும் – இது மேலதிகாரிகளின் பாரா முகமும் அதனால் ஏற்பட்ட பின் விளைவாகக் கருதப்படும். உயர்மட்டத் தலைவர்களுக்கு உங்கள் மீதிருந்த நம்பிக்கைக் குறையும். தங்கு தடையின்றி வந்து கொண்டிருந்த “மறைமுக வருமானம்” குறையும் பல காரணங்களினால்!!
மாணவ – மாணவியர்: கல்வி முன்னேற்றம் எவ்விதத் தடங்கலுமின்றி நீடிக்கிறது. காரணம், கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள க்ிரகங்கள் அனைத்தும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதே இதற்குக் காரணமாகும். சிலருக்கு உயர்கல்விக்கு உதவி கிடைக்கும் – எவ்விதச் சிரமமுமின்றி. அந்நிய நாடுகளில் விசேஷ உயர் கல்வி பயின்று வரும் மாணவ – மாணவியர், தங்கள் ப்ராஜெட்டுகளை குறித்த காலத்திற்குள் முடிப்பதுடன், பகுதி நேர வேலையும் கிடைத்துவிடும்.
விவசாயத் துறையினர்: எதிர்பார்க்கும் அளவிற்கு விளைச்சல் கிடைப்பது சற்று கடினமே என்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன. அடிப்படை வசதிகள் குறையும். கால்நடைகளின் பராமரிப்பில் செலவுகள் உயரும். பழைய கடன்கள் நீடித்து, கவலை தரும்.
பெண்மணிகள்: 7½ சனியுடன், ராகுவும் சேர்ந்துள்ளதால், உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம். இரவு நேரங்களில் தனியே வெளிச் செல்ல வேண்டாம். வாகனம் ஓட்டும்போது நிதானம் அவசியம். எப்போது நாம் எந்தெந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே உணர்த்தி, நம்மைப் பாதுகாப்பதில் ஜோதிடத்திற்கு இணை ஜோதிடமே!
அறிவுரை: வரவை விட, செலவினங்களை அதிகமாக்கிக் கொள்ளாதீர்கள். கூடியவரையில் சிக்கனத்தைக் கடைப்பிடியுங்கள். அதற்காக உங்களைச் சேமிக்கச் சொல்லவில்லை! கடன் வாங்காமலிருந்தாலே பெரிய விஷயமல்லவா?-அதற்காகத்தான் கூறுகிறோம். சிறு, சிறு விஷயங்களுக்குக்கூட மன-விரக்தி நிலையை அடைந்துவிடாதீர்கள். சகக் கூட்டாளிகளுடன் நட்பாகப் பழகாவிட்டாலும், கருத்துவேற்றுமை ஏற்படாமலாவது பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு முதல் படியாக, அவர்களுடன் எவ்வித வாக்கு வாதங்களிலும் ஈடுபடாமலிருப்பது ஒன்றே வழியாகக் கொள்ளுங்கள்!
பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஒருபோது மட்டும் உண்டு, இரவில் உபவாசமிருப்பது மிகச் சிறந்த பரிகாரமாகக் கொள்ளப்படுகிறது. இரவு நேரத்தில் சாப்பிடாமல் படுப்பதில் சிரமமிருந்தால் – முடியாதவர்கள், பால் – பழம் மட்டும் சாப்பிடலாம். தினந்தோறும் தவறாமல் அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று, 18 முறை வலம் வந்து வணங்கினாலேயே போதும். உங்களுக்கு ஏற்பட்ட சகல தோஷங்களும் விலகும். அனைத்தும் சந்தோஷங்களாக மாறும். இதனை அனுபவத்தில் காண்பீர்கள்.பக்தர்களாகிய நமக்குத் தேவை, திடமான பக்தியும், நம்பிக்கையும் மட்டுமே!