(26-4-2025 முதல் 25-11-2026 வரை)
(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: நவக்கிரகங்களில், அதி சக்திவாய்ந்த ராகு, ரிஷப ராசிக்கு, லாப ஸ்தானமாகிய மீனத்தைவிட்டு, ஜீவன ஸ்தானமாகிய கும்ப ராசிக்கு மாறுவது, பல அம்சங்களில் நன்மைகளையும், சில விஷயங்களில் சிரமத்தையும் கலந்து, அளிக்கக்கூடிய சஞ்சாரமாகும். சனி பகவானைப் போலவே, ராகுவும் கடினமான வேலையை வாங்கிய பின்பே, சற்று தாராளமாகக் கூலி கொடுக்கும் தன்மை வாய்ந்தவர். குடும்பத்தில் பண வசதி தாராளமாகவே இருக்கும். ஆயினும், இதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டி வரும். கேதுவின் நிலையினால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும், சுபச் செலவுகளும் அதிகமாக இருக்கும். சேமிப்பிற்கு சாத்தியக்கூறு இராது.ரிஷப ராசிக்கு, சிம்மம் சுகஸ்தானமாகும். ஆதலால், அடுத்துவரும் சுமார் 18 மாதங்களுக்கு கேதுவின் நிலையினால், மனதில் சுகம் குறையும். குடும்பத்தைப் பற்றிய கற்பனையான கவலைகள் மனதை அரிக்கும். பண வரவு, போதிய அளவு இருப்பினும், எதிர்பாராத செலவுகளினால், பணம் விரயமாகும். சித்திரை 28-ம் தேதி (மே 11, 2025 ஞாயிறன்று குரு பகவான் மிதுன ராசிக்கு மாறியவுடன், கும்ப ராசியில் உள்ள ராகுவிற்கு, அவரது சுபப் பார்வை கிடைக்கிறது. அதன் விளைவாக, ராகுவின்தோஷம் குறைகிறது.
உத்தியோகம்: பலன்களை நிர்ணயிக்கும்போது, ராகுவை மற்றொரு சனி போன்றும், கேதுவை இன்னுமொரு செவ்வாயாகவும் கருதி கணித்துப் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றன, மிகப் புராதன ஜோதிட ஆதார நூல்கள். கடுமையாக வேலை வாங்கினாலும், கொடுப்பதிலும், ராகு சற்று தாராளமாகவே இருப்பார், என விவரித்துள்ளது, “பூர்வ பாராசர்யம்” எனும் மிகப் பழைமையான ஜோதிடக் கிரந்தம். கண்டிப்பான, அதிகாரிகளின்கீழ் வேலை பார்க்க வேண்டிவரும். இருப்பினும், உங்கள் உழைப்பிற்கேற்ற கூலிகொடுக்கத் தயங்காதவர், ராகு! உங்கள் பொருளாதாரத்தைச் சீர்செய்துகொள்ள ஏற்ற சந்தர்ப்பம், இந்த ராகு – கேது இடப்பெயர்ச்சி! ஒரு சிலருக்கு, இடமாற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பார், கேது!! ஆயினும், அதனைக் காரணம் காட்டி, புதிய சலுகைகளையும் பெற்றுத் தருவார், ராகு!
தொழில், வியாபாரம்: இப்போது நடைபெறவுள்ள ராகு – கேது பெயர்ச்சி அரிய சந்தர்ப்பத்தை உங்களுக்கு வழங்கவிருக்கிறது. மார்க்கெட் நிலவரம் மிகவும் அனுகூலமாக விளங்கும். அன்றாட விற்பனை லாபகரமாக இருக்கும். புதிய சரக்குகளை அறிமுகம் செய்வதற்கு ஏற்ற தருணம் இது. கேதுவின் நிலையினால், அதிக அலைச்சலும், வெளியூர்ப்பயணங்களும் இருப்பினும், அதற்கேற்ப, முன்னேற்றம் மனதிற்கு நிறைவையளிக்கும். ராகுவின் நிலை காரணமாக, நிதி நிறுவனங்கள் முன்வந்து உதவும். புதிய விற்பனைக் கிளைகள் திறப்பதற்கு, ஏற்ற தருணமிது.. கேது அதிக அலைச்சலையும், பண விரயத்தையும் ஏற்படுத்தினாலும்கூட, வியாபார அபிவிருத்திக்கு அனுகூலமாகவே சஞ்சரிக்கிறார்.
கலைத் துறையினர்: கும்ப ராசியில் ஏற்பட்டுள்ள சனி – ராகு கூட்டுச் சேர்க்கை, கலைத் துறையினருக்கு வருமானத்தை உயர்த்தக்கூடிய கிரக நிலைகளாகும். அதே தருணத்தில், சுக ஸ்தானமும், ஆத்ம காரகரான சூரியனின் ஆட்சி வீடாகவும் திகழும் சிம்ம ராசியில், மோட்ச காரகரான கேது சஞ்சரிப்பது, புராதன ேஜாதிட நூல்களின்படி, மிகவும் அனுகூலமான கிரக நிலைகளாகும். குறிப்பாக, ஆன்மிக சொற்பொழிவாளர்கள், ஆகியோர் சிறந்த முன்னேற்றத்தை அடைவார்கள். மக்களிடையே பக்தியும் ஆன்மிகச் சிந்தனைகளும் ஓங்கும். சில கலைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பல கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பினையும் ஏற்படுத்தித்தருவார்கள், ராகுவும் – கேதுவும்!
அரசியல் துறையினர்: அரசியல் துறையில், ராகுவின் பங்கு எந்த அளற்கு அவசியமானது என்பதை சாணக்கியரின்” அர்த்த சாஸ்திரமும்”, விக்கிரமாதித்ய மன்னனின் அவை ேஜாதிடரான வராகமிகிரரும், விஜய நகரின் மாமன்னராக விளங்கிய கிருஷ்ண தேவராயரின் அவை ஜோதிட நிபுணரான, அல்லசானி பெத்தன்னாவும் அவரவர்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். தற்போது, சனி பகவானின் ஆட்சி வீடான, கும்ப ராசியில் அவருடன் ராகு சேர்ந்திருப்பது அரசியல் பிரமுகர்களுக்கு அரிய வாய்ப்புகளை அளிக்கும். நன்மையானாலும், தீமையானாலும், தயங்காமல் செய்யக்கூடியவர்கள் சனி பகவானும், ராகுவும். ஆதலால், பல நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
மாணவ – மாணவியர்: கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். கூடியவரையில், அரசியலில் ஈடுபடவேண்டாம்.
விவசாயத் துறையினர்: உழைப்பிற்கேற்ற விளைச்சலையும், வருமானத்தையும் பெற்றுத் தருவார்கள், சனி பகவானும், ராகுவும்! இருப்பினும், வேலை வாங்கியே கூலியைத் தருவார்கள் சனியும், ராகுவும். வயலில் கடின உழைப்பு, அலுப்பைத் தரும்.
பெண்மணிகள்: குடும்ப நிர்வாகத்தில், கடினமான பிரச்னை எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை! கூடிய வரையில், அதிக உழைப்பைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்கவும். சிறு, சிறு உடல் உபாதைகள் சோர்வை ஏற்படுத்தக்கூடும். வேலைபார்க்கும் மங்கையருக்கு, சக-ஊழியர்களினால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எச்சரிக்கை வேண்டும்.
அறிவுரை: நெருங்கிய உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சற்று அனுசரித்து நடந்துகொள்வது நன்மை செய்யும். முக்கியமாக, வாக்கு-வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுங்கள். பணவரவு சற்று தாராளமாகவே இருப்பதால், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற மூதுரைக்கேற்ப, சேமிப்பிற்கும் வாய்ப்புள்ளதை மறந்துவிட வேண்டாம். இன்றைய சேமிப்பு. நாளைய – எதிர்காலப் பாதுகாப்பு என்பதை உணர்ந்து, செயல்படுங்கள்.
பரிகாரம்: தினமும் காலையில், நீராடிய பின்பு, காகத்திற்கு எள், நெய், பருப்பு கலந்த ஐந்து சாத உருண்டைகள் வைத்து வரவும். அல்லது, ஒரு பசுவிற்கு உணவளித்தாலும் அதே பரிகாரப் பலனைக் கிடைக்கப் பெறலாம்.