(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)
குடும்பம்: ஜென்ம ராசியில் கேதுவும், ஸப்தம ஸ்தானத்தில், ராகுவும் மாறியிருப்பது அளவோடு பிரச்னைகளை ஏற்படுத்தும். கணவர் – மனைவியரிடையே கருத்துவேற்றுமையை ஏற்படுத்தி, ஒற்றுமையை பாதிக்கச் செய்வார், ராகு! களத்திர ஸ்தானம் என்பது கணவர் – மனைவியரின் பரஸ்பர அந்நியோன்யத்தையும், தாம்பத்தியத்தையும் நிர்ணயிக்கும் இடம் (ராசி) ஆகும். உத்தியோகம் காரணமாக, சிலர் குடும்பத்திலிருந்து பிரிந்திருக்க நேரிடும். மன அமைதி பாதிக்கப்படக்கூடும். குடும்பப் பிரச்னைகள் கவலையளிக்கும். கேதுவின் நிலையினால், மனதில் ஆன்மிகச் சிந்தனைகள் அதிகரிக்கும். தீர்த்த, தல யாத்திரை சித்திக்கும். மகான்களின் தரிசனம் புண்ணிய நதிகளின் புனித நீராடும் பேறு, மகாத்மாக்களின் ஜீவ சமாதி தரிசன பாக்கியம் கிட்டும். ஆரோக்கியம் சிறிதளவு பாதிக்கப்படும். எளிய சிகிச்சை மூலம் குணம் காணலாம். திருமண முயற்சிகள் தள்ளிப்போகும்.
உத்தியோகம்: சக ஊழியர்களுடன் நெருங்கிப் பழகுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக, பெண் ஊழியர்களினால் உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஸப்தம (7) ஸ்தான ராகு, மனதில் சபலத்தை ஏற்படுத்துவார். மற்றபடி, பணிகளில் கவனம் சிதறாது.
தொழில், வியாபாரம்: நியாயமற்ற போட்டிகளைச் சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். விஸ்தரிப்புத் திட்டங்களை ஒத்திப்போடுதல் நன்மையளிக்கும். ஜென்ம ராசி, கேதுவினால், நிர்வாகத்தில் கவனம் குறையும். சக அதிகாரிகளினால் கவலையுண்டாகும். ஜென்ம ராசியில் கேது அமர்ந்திருப்பதால், சந்தை நிலவரம் உதவிகரமாகவே இருக்கும்.
கலைத் துறையினர்: கலைத் துறைக்கும், ஸப்தம (7) ராசிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அங்கு, வீர்ய கிரகமான ராகு அமர்ந்திருப்பது, நன்மைகளைத் தராது. வருமானம் அளவோடுதான் நிற்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். ராகுவினால் ஏற்படும் தோஷத்தை ஜென்ம ராசி கேது குறைத்துவிடுகிறார் (ஆதாரம் : “பிருஹத் ஜாதகம்”) திரைப்படத் துறையினருக்கு, பணப் பற்றாக்குறை கடுமையாக இருக்கும்.
அரசியல் துறையினர்: கட்சியில் செல்வாக்கு குறையும். தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், வழக்குகளில் அகப்பட்டுக்கொள்ள நேரிடும். நெருங்கிய நண்பர்களால் கட்சியில் பிரச்னைகள் உருவாகும். கூடியவரையில், பொதுக் கூட்டங்களில் பேசுவதை, சில மாதங்களுக்குத் தவிர்ப்பது உங்கள் எதிர்கால அரசியலுக்கு நன்மை பயக்கும். கேதுவின் நிலையினால், தெய்வ பக்தி அதிகரிக்கும்,
விவசாயத் துறையினர்: வயலில் உழைப்பு கடினமாகும். பழைய கடன்கள் கவலையளிக்கும். விளைச்சல் குறையாது. அடிப்படை வசதிகளாகிய, தண்ணீர், உரம், விதை, இடுபொருட்கள் தேவைக்கேற்றபடியே கிடைக்கும். கால்நடைகளின் பராமரிப்பிற்கு புதிய கடன்களை ஏற்கவேண்டிய அவசியம் உண்டாகும்.
மாணவ, மாணவியர்: சப்தம ஸ்தான ராகு, மனதில் தவறான எண்ணங்களைத் தோற்றுவிப்பார். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். முக்கியமாக, சக மாணவியரிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்தல் மிக, மிக அவசியம். இந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்வீர்களேயானால், உங்களின் மேற்படிப்பு மிகக் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகும். அதனால் உங்களின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகும் என்பதற்காகவே இந்த எச்சரிக்கை உங்களுக்கு!
பெண்மணிகள்: ராகுவின் தோஷத்தினால் மன அமைதி பாதிக்கப்படும். கணவரின் பொறுப்பில்லாத செய்கைகள், அலட்சிய மனப்பான்மை கவலையை அளிக்கும். கேதுவின் நிலையினால், பக்தி மேலோங்கும். பல புண்ணிய திருத்தலங்களுக்கும், சித்த மகா புருஷர்களின் ஜீவ சமாதிகளுக்கும் சென்று தரிசிக்கும் பாக்கியத்தையும் உண்டாக்கும்; அதனால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
மனக்கிலேசங்கள், சஞ்சலங்களற்ற மனத்துடையவர்களாக முகத்தில் நிர்ஜலமான ஒருவித பூரிப்புடன் திகழ்வீர்கள்.
அறிவுரை: கடைக்கு வாங்குவதற்குச் செல்லுமுன், தேவையற்ற பொருட்களை வாங்கக்கூடாது என்ற வைராக்கிய மனத்துடனும், சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும் என்ற மனவுறுதியுடனும், சென்றால் அநாவசியப் பொருட்களினால், வீட்டில் இட நெருக்கடி ஏற்படாது; கையில் இருந்த பணமும் விரயமாகாமல் காப்பாற்றப்படும், உங்கள் எதிர்காலத் தேவைகளுக்காக மிச்சப்படும்!
பரிகாரம்:நரசிம்ம ேக்ஷத்திரம் ஒன்றிற்குச் சென்று (பூவரசன் குப்பம், பரிக்கல், அபிஷேகபாக்கம்) கர்ப்பக்கிரகத்தில் எரியும் தூண்டா விளக்கில் சிறிது நெய் சேர்த்து, தரிசித்துவிட்டு வந்தால் போதும். ராகு – கேது தோஷங்கள் தீயிலிட்ட தூசுபோலாகும்.