கடகம்

Published: Last Updated on

(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)

குடும்பம்: அஷ்டம ராசியில் சனி பகவான் அமர்ந்திருக்கும் இக்காலகட்டத்தில், குரு பகவான் ராசிக்கு லாப ஸ்தானமாகிய, ரிஷபத்திற்கு மாறியிருப்பது, மிக நல்ல கிரக மாறுதலாகும். எப்பொழுதெல்லாம் பண நெருக்கடி ஏற்படுகிறதோ அத்தகைய தருணங்களில், எதிர்பாராத இடங்களிலிருந்து நிதியுதவி கிட்டும். கோள்சார விதிகளின்படி, அஷ்டமச் சனிக் காலத்தில், உடல் நலன் பாதிக்கப்படக்கூடும். அத்தகைய கடுமையான சனிபகவான் தோஷத்தை குருவின் ரிஷப ராசி சஞ்சாரக் காலம் குறைத்துவிடுகிறது என்பதைப் “பூர்வ பாராசர்யம்” -என்னும் மிகப் புராதனமான ஜோதிட நூல் கூறுகிறது. விலைமதிப்பிட முடியாத இந்நூல், பராசர மகரிஷி இயற்றியது என ஆன்றோர்களும், சான்றோர்களும் கூறுகின்றனர். தற்காலத்திய ஜோதிட நூல்கள் பலவற்றின் ஆதார கிரந்தங்களில் ஒன்றாகத் திகழ்கிறது, தன்னிகரற்ற பூர்வ பாராசர்யம். இதன் மற்றொரு பாகமான, “உத்தர பாராசர்யம்” ஏராளமான பகைவர்களின் படையெடுப்புகளின்போது, காணாமற்போய்விட்டது (அல்லது அழிக்கப்பட்டுவிட்டது…?)

உத்தியோகம்: உத்தியோகத் துறையும், சனி பகவானின் அதிகாரத்தில்தான் உள்ளது. அத்தகைய சக்திவாய்ந்த சனி பகவான், கடக ராசியினருக்கு, 8-ம் இடத்தில் நிலைகொண்டுள்ளதால், பணியாற்றும் இடத்தில் பல பிரச்னைகள் ஏற்படக்கூடும். அத்தகைய கடுமையான தோஷத்தை குருவின் ரிஷப ராசி சஞ்சாரம் குறைக்கிறது. மேலதிகாரிகளின் போக்கில் சாதகமான மாறுதலை இப்போது காண முடியும். அலுவலகப் பொறுப்புகள் காரணமாக, ஏற்பட்டுவந்த வெளியூர்ப் பயணங்கள், கடின உழைப்பு ஆகியவை இனி பெருமளவில் குறைவதை அனுபவத்தில் காண முடியும். ஒரு சிலருக்கு, பதவி மாற்றம் ஏற்படக்கூடும். அதனால் ஊதியம் சற்று உயருவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை குருவின்நிலை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தொழில், வியாபாரம்: சனி பகவானால், அஷ்டம ஸ்தானத்திற்கும் (8-ம் இடம்), ராகுவினால் பாக்கிய ஸ்தானத்திற்கும் ஏற்பட்டுள்ள தோஷம் , இப்போது குருவின் ரிஷப ராசி சஞ்சாரத்தினால் குறைகின்றன. கடக ராசிக்கு, பூர்வபுண்ணிய ஸ்தானத்தை குரு பார்வையிடுவது, மிக நல்ல பலனை அளிக்கவுள்ளது. பழைய கடன்கள் இருப்பின், அவை இப்போது அடைபடும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு, அதன் காரணமாக, வியாபாரம் அபிவிருத்தியடையும். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிட்டும். கூட்டாளிகளுடன் ஏற்பட்டுவந்த கருத்துவேற்றுமை நீங்கும். புதிய விற்பனைக் கிளைகள் ஆரம்பிப்பதற்கு, அனைத்து உதவிகளும் தேடி வரும்.

கலைத் துறையினர்: கலைத்துறைக்கு ஆதார கிரகம், சுக்கிரன் என்பதை நேயர்கள் அறிவார்கள். அத்தகைய சக்திவாய்ந்த சுக்கிரனின் ஆட்சிவீடாகிய, ரிஷபத்தில் உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதியான குரு பகவான் மாறியிருப்பது, சுபிட்சத்தைக் குறிக்கிறது. குடும்ப வாழ்க்கை மலரும். பணப் பற்றாக்குறை தீரும். கைநழுவிப்போன நல்ல வாய்ப்புகள் இனி, தேடி வரும். உங்களை அடியோடு மறந்திருந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் உங்களைத் தேடி வருவார்கள், இப்போது! செல்வாக்கும், செல்வமும் உயரும். மக்களிடையே ஆதரவு அதிகரிக்கும். திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நிதிநிறுவனங்கள் ஆதரவு தரும்.

அரசியல்துறையினர்: அரசியல் துறை, சுக்கிரனின் அதிகாரத்தில்தான் உள்ளது. அஷ்டமச் சனியினால், பலவிதங்களிலும், கஷ்டப்பட்டுவந்த கடக ராசி அன்பர்களுக்கு, ஏழைக்குக் கிடைத்த புதையல் போன்று அமைகிறது, குரு பகவானின் ரிஷப ராசி சஞ்சாரம். இதுவரை உங்களைத் தொடர்ந்து புறக்கணித்துவந்த, மேல்மட்டத் தலைவர்கள், உங்களைத் தேடிவருவார்கள் – இப்போது!

மாணவ – மாணவியர்: குரு பகவானின் திருவுள்ளத்திற்கு மிகவும் பிடித்தவர்கள் மாணவ – மாணவியர்! ரிஷப ராசியில் நிலைகொண்டு்ள்ள கடக ராசி மாணவ மணிகளுக்கு, சிறந்த கல்வி முன்னேற்றத்தை அளிக்கவுள்ளார், குரு! நேர்முகத் தேர்வுகளில், மிகச் சரியான விடைகளைக் கூறி, வெற்றிக்கனியை எட்டிப்பிடித்துவிடுவீர்கள்!

விவசாயத் துறையினர்: உைழப்பிற்கேற்ற வருமானத்தையே விளைச்சலையும், தயங்காது தந்திடுவார், ரிஷப ராசியிலுள்ள குரு பகவான். பழைய கடன்களைத் தீர்த்து, மன அமைதியைத் தந்திடுவார். ஜெனன கால ஜாதகத்தில் செவ்வாய், சுப பலம் பெற்றுத் திகழ்ந்தால், புதிய விளைநிலம் வாங்கும் யோகத்தையும் தந்தருள்வார், குரு பகவான். மனதை அரித்து வந்த பழைய கடன்கள் இப்போது நீங்கும்.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைப் பாதுகாக்கும் இரு கிரகங்களில் ஒருவர் குரு பகவான், மற்றொருவர் சுக்கிரன். அத்தகைய சுக்கிரனின் ஆட்சிவீடான ரிஷபத்தில் குரு பகவான் சஞ்சரிப்பது, சிறந்த யோக பலன்களை எடுத்துக்காட்டுகிறது. புதிய விளைநிலம் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது. பழைய கடன் இருப்பின் அவற்றை அடைத்து நிம்மதிபெற ஏற்ற காலகட்டமிது.

அறிவுரை: கடக ராசியினருக்கு, ஆயுள் ஸ்தானமாகிய கும்ப ராசியில் சனி பகவானும், பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும் நிலைகொண்டுள்ள இத்தருணத்தில், குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய, ரிஷபத்திற்கு மாறியிருப்பது, தாகத்தினால் தொண்டை வறண்டு தவிக்கும் ஒருவருக்கு, நீருற்றைக் கண்டதுபோன்ற நிலையாகும், குரு பகவானின் ரிஷப ராசி சஞ்சாரம். கடகத்திற்கு ஆயுள் ஸ்தானம் கும்பம்! ஆயுள் ஸ்தானாதிபதியும், சனிபகவானே!! இருப்பினும், கோள்சார விதிகளின்படி, “எட்டில் சனி – துன்பத்தைத் தருவார்…!” கடக ராசியினருக்கு மட்டும், சனிபகவானால் ஏற்படும் அஷ்டம ஸ்தான தோஷம் சற்றுக் குறைவாகவே இருக்கும். மற்றபடி, தோஷம் – தோஷமே!! குருவின் ரிஷப ராசி சஞ்சாரம், சனியின் தோஷத்தைப் பெருமளவில் குறைக்கிறது.

பரிகாரம்: ரிஷப ராசி சஞ்சாரத்தினால், நமக்கு பல தோஷங்கள் விலகுகின்றன! சனியின் அஷ்டம ஸ்தான சஞ்சார தோஷம், ராகுவின் மீன ராசி சஞ்சார தோஷம் ஆகியவற்றைப் போக்குவதினாலும், குறைப்பதினாலும் நமக்கு மகத்தான உதவியைச் செய்துள்ளார், குரு பகவான்! அதற்காக, வியாழக்கிழமைகளில், மாலை நேரத்தில் திருக்கோயில் ஒன்றிலோ அல்லது நம் வீட்டின் பூஜையறையிலோ மண் அகல் ஒன்றில் நெய் தீபம் ஏற்றி வைப்பது, நவக்கிரகங்களின் பரம கருணை நம்மீது கொண்ட குரு பகவானுக்கு ஏற்றிவைப்பது, அவரது திருவுள்ளத்திற்கு மிகவும் உகந்ததாகும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us