(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)
குடும்பம்: ஏழரைச் சனியின் முதல் பகுதியின் பாதிப்பில் உள்ள நிலையில், உங்கள் ராசி நாதனாகிய குரு பகவானும், சித்திரை மாதம் 28-ம் (11-05-2025) தேதியிலிருந்து, அர்த்தாஷ்டக ராசிக்கு மாறுவது, நன்மை தராது! இருப்பினும், கும்ப ராசியில் அமர்ந்து, உங்களுக்குப் பல பிரச்னைகளை ஏற்படுத்திவரும், சனியையும், ராகுவையும், குரு பகவான் 9-ம் பார்வையாக, பார்ப்பது தோஷ நிவர்த்தியாகும். சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணமாகும். புரட்டாசி 22-ம் (08-10-2025) தேதியன்று, குரு பகவான், கடகத்திற்கு மாறியவுடன், உங்கள் ஜென்ம ராசியைப் பார்ப்பது, அனைத்து தோஷங்களையும் போக்கவல்ல, சக்திகொண்டதாகும். எதிர்பாராத செலவுகளில் பணம் விரயமாகும். மனைவியின் ஆரோக்கியத்தில் சிறு பின்னடைவு ஏற்பட்டு, பிறகு எளிய சிகிச்சையினால், குணம் கிட்டும். திருமண வயதிலுள்ள பெண் அல்லது பிள்ளை இருப்பின், வரன் அமைவதில் தடங்கல்கள் ஏற்படும்.
உத்தியோகம்: ஏழரைச் சனியின் ஆரம்பப் பகுதியிலுள்ள உங்களுக்கு, சனியுடன் ராகுவும் சேர்வதால், வேலைச் சுமையும், பொறுப்புகளும் அதிகரிக்கும். நிர்வாகத்தினருடன் கருத்துவேற்றுமையும், சிறிது மனக் கசப்பும் ஏற்படக்கூடும் என்பதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. அலுவலகப் பொறுப்புகள் சம்பந்தமாக, வெளியூர்களுக்குச் செல்லும்போது, பொருட்களையும், அலுவலக ஆவணங்களையும் அதி ஜாக்கிரதையாகப் பாதுகாத்துக் கொள்ளவும். ஏனெனில், பொருட்கள் களவுபோக சாத்தியக்கூறு உள்ளது. தேவை இருந்தால் தவிர, வெளியில் அலைவதைக் குறைத்துக் கொள்வது, மருத்துவ ரீதியில் உங்களுக்கு நன்மையளிக்கும்.
தொழில், வியாபாரம்: ஏழரைச் சனியுடன், ராகுவும் விரய ஸ்தானத்தில் சேர்ந்திருப்பதை கவனியுங்கள்! கோள் சாரத்திலும், புரட்டாசி 21-ம் (7-10-2025) தேதி வரை, குரு பகவான் அனுகூலமாக இல்லை! புரட்டாசி 3-ம் வாரம் வரையில், சந்தை நிலவரத்தை முன்கூட்டியே ஆராய்ந்து பார்க்காமல் உங்கள் சரக்குகளை அனுப்ப வேண்டாம். எதிர்பாராத பிரச்னைகளினால், நஷ்டம் ஏற்படக்கூடும். கிரக நிலைகளின்படி, விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டில் உங்கள் உற்பத்தியை அளவோடு வைத்துக் கொள்வது நல்லது. வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களினாலும் பிரச்னைகள் ஏற்பட சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
கலைத் துறையினர்: விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு முழுவதும், கலைத் துறையைத் தங்கள் அதிகாரத்தில் கொண்டுள்ள சுக்கிரன், குரு மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஓரளவே உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், எதையும் முன்கூட்டியே ஆராய்ந்து, திட்டமிட்டுச் செய்வது அவசியம். திரைப்படத் துறையினருக்கு, நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைப்பது, சற்று கடினமே. ஆதலால், படங்கள் தயாரிக்கும்போது, அதிக முதலீடுகளில் ஈடுபடாமல், நல்ல கருத்துக்களைக் கொண்ட திரைப்படங்களில் அளவோடு முதலீடு செய்து எடுப்பது, லாபத்தைப் பெற்றுத் தரும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு, அதிகாரம் கொண்ட சுக்கிரன், செவ்வாய், சனி மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் அனுகூலமாக இல்லை! வருடத்தின் கடைசி இரண்டு மாதங்களில் மட்டும் தான், உங்களுக்கு உதவிகரமாக மாறுகின்றனர். ஆதலால், உங்கள் பேச்சுகளிலும், பத்திரிகைப் பேட்டிகளிலும், முக்கிய முடிவுகளிலும் நிதானம் அவசியம்.
மாணவ – மாணவியர்: விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டின் ஆரம்பம் முதல் புரட்டாசி 21-ம் (07-10-2025) தேதி வரை கல்வி முன்னேற்றம் ஒரே சீராக இருக்கும். ஏற்றத் தாழ்வு ஏதும் இராது என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. புரட்டாசி 22-ம் (8-10-2025) தேதியிலிருந்து, குரு பகவான் கடகத்திற்கு மாறி சிறந்த, சுப பலம் பெறுகிறார். கடகம் – குரு பகவானுக்கு உச்ச வீடாகும்! கடகத்திலிருந்து, தனது ஆட்சி வீடான மீனத்தையும், தனது சுபப் பார்வையினால், பலப்படுத்துகிறார். சனி மற்றும், ராகுவினால் ஏற்படும் தோஷத்தை, உங்கள் ராசிக்கு ஏற்படும் தேவ குருவின் பார்வை அடியோடு போக்கிவிடுகிறது. “குரு பார்வை கோடி தோஷத்தைப் போக்கும்….!” என்றொரு மூதுரையே உள்ளது.
விவசாயத் துறையினர்: வயல் பணிகளில், உழைப்பு கடினமாக இருப்பினும், உங்கள் ராசி நாதனாகிய குரு பகவான், அதற்கேற்ற பரிசை உங்களுக்கு அளிப்பதற்குத் தவற மாட்டார்! பயிர்கள் செழித்து வளரும். விளைச்சல் உள்ளத்தைக் குளிர வைக்கும். வருமானம் உயரும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருந்தால், புதிய விளை நிலம் வாங்கும் யோகமும் உள்ளதையும் குரு பகவான் எடுத்துக்காட்டுகிறார்.
பெண்மணிகள்: ஏழரைச் சனி மற்றும் விரய ராகுவின் பிடியில் அகப்பட்டுக்கொண்டுள்ள உங்களுக்கு, குரு பகவானின் மிதுன ராசி சஞ்சாரமும், சனி – ராகுவிற்கு ஏற்படும் குருவின் சுபப் பார்வையும் சமயசஞ்ஜீவியாக அமைந்துள்ளன. சனி மற்றும் ராகுவினால் ஏற்படும் தோஷத்தைப் போக்கும் சக்திவாய்ந்தவர் குரு பகவான் ஒருவரே என “பூர்வ பாராசர்யம்” மற்றும் “பிருஹத் ஸம்ஹிதை” போன்ற மிகப் புராதன ஜோதிட நூல்கள் கூறுகின்றன. தற்போது ராகு மற்றும் சனிக்கு குரு பார்வை ஏற்படுவதால், தோஷம் அடியோடு நீங்கிவிடுகிறது.
அறிவுரை: இரவு நேரங்களில், தனியே செல்வதையும், வாகனம் ஓட்டுவதையும் தவிர்த்தல் வேண்டும். நண்பர்கள் எவருடனும், வாக்குவாதம் வேண்டாம். சிறு உடல் உபாதையானாலும், தக்க மருத்துவரிடம் காட்டி, சிகிச்சை பெறுவது மிகவும் நல்லது.
பரிகாரம்: வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டின் பூஜையறையிலோ அல்லது அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ மாலையில் தவறாது, தீபமேற்றி வருவது மிகச் சிறந்த பரிகாரம் என மிகப் புராதனமான ஜோதிட நூலாகிய “பரிகார ரத்தினம்” அறுதியிட்டுக்கூறுகிறது. வயோதிக – ஏழை ஒருவரை வீட்டிற்கு அழைத்து, ஸ்நானம் செய்வித்து, வஸ்திரம் மற்றும் உணவளித்து, அவரை வணங்கி ஆசி பெறுவது மிகச் சிறந்த பரிகாரமாகும்.