(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குடும்பம்: சிம்ம ராசியினருக்கு, பூர்வ புண்ணிய, ஆயுள் ஸ்தானாதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு, சித்திரை 28-ம் (11-5-2025) தேதியன்று மாறுவது, பல நன்மைகளை அளிக்கவுள்ள கிரக மாறுதலாகும். புரட்டாசி 21-ம் (7-10-2025) தேதி வரை, குரு பகவான், உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் பல சுப நிகழ்்ச்சிகள் நிகழும். வருமானம் அதிகரிக்கும். விவாக முயற்சிகளில் நல்ல வரன் அமையும். கணவர் – மனைவியரிடையே ஒற்றுமையும், பரஸ்பர அந்நியோன்யமும் நிலவும். திருமணமான பெண்மணிகள், கருத்தரிப்பதற்கு ஏற்ற காலகட்டமிது . நீதிமன்ற வழக்குகள் இருப்பின், பரஸ்பர சமரசத்தில் முடியும். பிள்ளை அல்லது பெண்ணிற்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு, வசதியான வீட்டிற்கு மாற்றம் ஏற்படும். இத்தகைய நன்மைகள், புரட்டாசி 22-ம் தேதி (8-10-2025) குரு பகவானால், அதிக நன்மைகளை எதிர்பார்க்க முடியாது.
உத்தியோகம்: உத்தியோகத் துறை, சனி பகவானின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது! அவர், ராகுவுடன் சேர்ந்து, ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் (7) சஞ்சரிக்கிறார். குரு பகவானின் பார்வை கிடைப்பது, தக்க தருணத்தில், கைகொடுத்து உதவுகிறது. தற்காலிகப் பணியிலுள்ள தொழிலாளர்களுக்கு, பணி நிரந்தரமாகும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் அன்பர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். ராகுவின் சேர்க்கையினால், சக்திக்கு மீறி உழைத்துவரும் தொழிலாளிகளுக்கு, குரு பகவானின் பார்வை, உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெற்றுத் தரும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் சிம்ம ராசி அன்பர்களுக்கு, சலுகைகள் கூடும்.
தொழில், வியாபாரம்: கும்ப ராசியில் ஏற்பட்டுள்ள சனி – ராகு கூட்டுச் சேர்க்கையினால், பின்னடைவையே சந்தித்துவந்த வர்த்தகத் துறையினருக்கு, குரு பகவானின் சஞ்சாரம் ஓர் வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். சந்தையில், விற்பனை திருப்திகரமாக இருக்கும். லாபம் உயரும். உங்கள் சரக்குகளுக்கு, நல்ல வரவேற்பு கிடைக்கும். நிதி நிறுவனங்களின் ஆதரவு, தக்க தருணத்தில் கிடைக்கும். ஜனன கால ஜாதகப்படி, தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், புதிய விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கும் சாதகமான காலகட்டமிது! சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள்.
கலைத் துறையினர்: கலைத் துறையினருக்கு, குரு பகவான், லாப ஸ்தானத்திற்கு மாறுவதால், வருமானம் உயரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாட்டில் நிகழவுள்ள கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டும். அதன்மூலம் வருமானமும் உயரும். சங்கீதம், பரத நாட்டியப் பள்ளிகளில் அதிகளவில் மாணவ – மாணவியர் சேருவார்கள். பல கலைஞர்களுக்கு, அரங்கேற்றம் நடைபெறும். அதன் காரணமாக, வருமானமும் உயரும். மக்களிடையே உங்கள் நிறுவனம் பிரபலமாகும். திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ஷ்டகரமான காலகட்டமிது என்பதை குரு பகவானின், சஞ்சாரம் எடுத்துக்காட்டுகிறது. ஆன்மிகம், சரித்திரம், சமூகப் பிரச்னைகள் ஆகியவற்றைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படும் படங்கள் பிரபலமாகும். நல்ல வசூலையும் பெற்றுத் தரும். தயாரிப்பாளர்களின் புகழ் ஓங்கும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு அதிகாரம் படைத்த, சுக்கிரனை, குருபகவான் பார்வையிடுவதால், இப்புத்தாண்டில் செல்வாக்கு அதிகரிக்கும். கட்சியில் ஆதரவு பெருகும். பிற கட்சியினரும், உங்கள்மீது மரியாதை செலுத்துவார்கள். மறைமுக வருமானத்திற்கும் வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. அவ்வப்போது உருவாகும் வாய்ப்புகளைச் சாதுர்யமாகவும், சற்று சிந்தித்தும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வரும் ஓராண்டு அதிக வாய்ப்பினை உங்களுக்கு ஏற்படுத்தித் தருகிறது. தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், செல்வாக்கு நிறைந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் தொடர்பு கிடைக்கும். அது உங்கள் அரசியல் வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்பதை கிரக நிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வது, உங்கள் திறனில் உள்ளது.
மாணவ – மாணவியர்: புரட்டாசி முடியும் வரையில், கல்வித் துறைக்கு அதிகாரம் கொண்டுள்ள கிரகங்கள் உங்களுக்கு ஆதரவாக வலம் வருகின்றனர். படிப்பில் தீவிரமாக மனம் ஈடுபடும். நல்ல சக – மாணவர்களின் நட்பு ஏற்படும். ஆசிரியர்களின் ஆசியும், வழிகாட்டுதல்களும் கிட்டும். தேர்வுகளில் உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று மகிழ்வீர்கள்! வெளிநாடு சென்று விசேஷ உயர் கல்வி பயில வேண்டும் என்ற ஆர்வம் மேலிடும். அதற்கான பூர்வாங்க முயற்சிகளை இப்போது திட்டமிடலாம்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை தங்கள் பிடியில் வைத்துள்ள செவ்வாய் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கும் நிலையில், சப்தம ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள சனி – ராகுவிற்கு, குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பது, உங்கள் அதிர்ஷ்டம் என்றே ஜோதிடக் கலை கூறுகிறது!! இந்த உண்மை, உங்கள் நிலத்தின் செழிப்பைப் பார்த்தாலே உணர்ந்து கொள்ளலாம். விளைச்சலும், வருமானமும் உங்கள் மனதைக் குளிர வைக்கும். குருபகவானின் பார்வை சக்தி, அளவற்றது. மேலும், சிம்ம ராசியினருக்கு, குரு பகவான், பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியாக அமைந்திருப்பது, உங்கள் பாக்கியமேயாகும்.
பெண்மணிகள்: சிம்ம ராசி பெண்களுக்கு, சப்தம ஸ்தானத்தில் (7-ம் இடம்) சனி – ராகு கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ள இத்தருணத்தில், குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பது, அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். திருமணமான பெண்மணிகளின் ஜாதகத்தில், 7-ம் இடம் கணவருடன் உள்ள அந்நியோன்யத்தைக் குறிக்கும் ராசியாகும். அந்த இடத்தில் சனி – ராகு இருப்பது, தோஷமே! அந்தத் தோஷத்தை இப்போது குரு பகவானின் சுபப் பார்வை நீக்கிவிடுவதால், கணவர் – மனைவியரிடையே ஏற்பட்ட கருத்துவேற்றுமை நீங்கி, மீண்டும் ஒற்றுமை நிலவும்.
அறிவுரை: சிறு விஷயங்களுக்கெல்லாம் கணவருடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில், பசுவிற்கு உணவளித்தல் சிறந்த பரிகாரமாகும்.