(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: சித்திரை 28-ம் (11-05-2025) தேதியன்று குரு பகவான் ஜென்ம ராசிக்கு மாறுகிறார்! “ஜென்ம ராசி வனத்திலே….!” -என்றொரு மூதுரையே காலங்காலமாக உள்ளது. ÿ ராமபிரான் வனவாசம் சென்றதும், அவரது ஜாதகத்தில், குரு பகவான் சஞ்சரித்தபோதுதான்!! குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கணவர் – மனைவியரிடையே ஒற்றுமை குறையும். திருமண முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். குடும்பம் சம்பந்தமான, சிறு விஷயங்்களுக்காகக்கூட, அதிக அலைச்சலும், உழைப்பும் ஏற்படும். ஒரு சிலருக்கு, வீடு மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. உடல் உபாதைகளினால், மருத்துவச் செலவுகள் ஏற்படும். பரிகாரம் உதவும்.
உத்தியோகம்: பாக்கிய ஸ்தானத்தில், நிலைகொண்டுள்ள சனி மற்றும் ராகுவிற்கு குரு பகவானின் சுபப் பார்வை கிடைக்கிறது. மேலதிகாரிகளின் ஆதரவும், உதவியும் கிடைப்பது, மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊதிய உயர்வு, இப்போது கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் மிதுன ராசி அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும். அந்நிய நாடுகளில் பணியாற்றி வருபவர்களுக்கு, கூடுதல் சலுகைகள் கிடைக்கும். வெளிநாடு சென்று, வேலை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு, அந்த ஆசை நிறைவேறும்.
தொழில், வியாபாரம்: ஜென்ம ராசியில், குரு சஞ்சரிப்பதினால், சந்தையில் போட்டிகள் கடுமையாகவே இருக்கும். இருப்பினும், நல்ல விற்பனையும், எதிர்பார்த்ததைவிட, அதிக லாபமும் கிடைக்கும். புதிய விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு ஏற்ற மாதம் இது. பாக்கிய ஸ்தானத்தில் ஏற்பட்டுள்ள சனி – ராகு கூட்டுச் சேர்க்கை, வியாபார அபிவிருத்தியை உறுதி செய்கிறது. மேலும், கும்ப ராசியை, குரு பகவான், தனது சுபப் பார்வையினால், தோஷமற்றதாகச் செய்கிறார்! கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். புதிய முயற்சிகளில் அளவோடு முதலீடு செய்யலாம். ஏற்றுமதி இறக்குமதித் துறையினருக்கு, வியாபார முன்னேற்றம் சம்பந்தமாக, வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். உழைப்பு கடினமாக இருப்பினும், அதற்கேற்ற லாபத்தை அளித்தருள்வார்கள், சனியும், ராகுவும்.
கலைத் துறையினர்: அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும் அலுப்பை ஏற்படுத்தும். ஆயினும், வருமானத்திற்குக் குறைவிராது. சங்கீதம், பரதநாட்டியம், அழகு நிலையங்கள் ஆகிய துறையினருக்கு, கிரக நிலைகள் ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். திரைப்படத் தயாரிப்பாளர்கள், புதிய படப்பிடிப்புகளில் தங்கள் கவனத்தைச் செலுத்தலாம். லாபகரமாக இருக்கும். நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் ஆகியோருக்கு புதிய வாய்ப்புகள் கைகொடுக்கும். இருப்பினும், ஓய்வில்லாது உழைக்க வேண்டிவரும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறைக்குச் சம்பந்தப்பட்ட கிரகங்கள் அனுகூலமாக உள்ளனர். பாக்கிய ஸ்தானத்தில், சனி – ராகு இணைந்திருப்பது, சிறந்த யோக பலன்களை எடுத்துக்காட்டுகிறது. கட்சியில் முக்கியமான பதவியொன்று உங்களைத் தேடி வரும். மேல்மட்டத் தலைவர்கள், உங்கள் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டிருப்பார்கள். தொண்டர்்களிடையேயும் செல்வாக்கு உயரும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், அரசாங்கப் பதவியொன்றில் அமரும் யோகமும் உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன.
மாணவ – மாணவியர்: இம்மாதம் முழுவதும், மாணவ – மாணவியருக்கு, மிகவும் சாதகமாக அமைந்துள்ளன சம்பந்தப்பட்ட கிரகங்களின் சஞ்சார நிலை. பாடங்களில் மனம் ஆர்வத்துடன் ஈடுபடும். நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வுகளில் சரியான விடைகளை அளித்து, நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ்வது நிச்சயம் என்பதை, கிரக சஞ்சார நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைமீது, ஆதிக்கம் செலுத்தும் அனைத்து கிரகங்களும், குரு பகவானுடன் சம்பந்தப்பட்டு, சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சலும், வருமானமும் கிடைப்பது நிச்சயம். இருப்பினும், சனி – ராகு இருவருமே வேலை வாங்கிய பிறகே கூலி கொடுக்கும் யஜமானர்களாவர். ஆதலால், வயல் பணிகள் சற்று அதிகமாகவே இருக்கும். அடிக்கடி சோர்வும், உடல்நலக் குறைவும் ஏற்படும். ஆடுகள், மாடுகள் ஆகியவற்றின் பராமரிப்பில், பணம் விரயமாகும். கடின உழைப்பினால், உடல் ஓய்விற்குக் கெஞ்சும். பழைய கடன்கள் கவலையை அளிக்கும். குருபகவானின் பார்வை, தக்க தருணங்களில், “சமய சஞ்ஜீவியாக” கைகொடுத்து உதவும்.
பெண்மணிகள்: நெருங்கிய உறவினர்களுடன் சற்று அனுசரித்து நடந்து கொள்வது, மன நிம்மதியை அளிக்கும். குடும்பத்தில், வீண் செலவுகள் அதிகரிக்கும். கணவருடன் சிறு, சிறு வாக்குவாதங்களும், கருத்து வேற்றுமையும் ஏற்படுவதால், மன நிம்மதி பாதிக்கப்படும். உணர்ச்சிவசப்படுவதையும், முன்-கோபத்தையும் குறைத்துக் கொள்வது, நன்மை செய்யும். சனி மற்றும் ராகுவை குரு பகவான், பார்வையிடுவதால், வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, அலுவலகச் சூழ்நிலை, மன நிறைவையளிக்கும்.
அறிவுரை: ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் அன்பாகப் பழகுங்கள்! உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது அவசியம். அவர்கள் நியாயமாக உங்களிடம் நடந்துகொள்ளாவிடினும், நீங்கள் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்வது எதிர்காலத்திற்கு நன்மை செய்யும்.
பரிகாரம்: சக்தியும், வசதியும் உள்ள அன்பர்கள், குரு பரிகாரத் திருத்தலங்களாகிய திட்டை, ஆலங்குடி, குருவித்துறை ஆகிய திருத் தலங்களில் ஏதாவதொன்றிற்குச் சென்று நெய் தீபம் ஏற்றிவைத்து, தரிசித்துவிட்டு வருவது நல்ல பலனையளிக்கும். இயலாத அன்பர்கள், பசுக்களுக்கு பசும்புல் கொடுத்தால் நல்ல பலனளிக்கும்.