(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
குடும்பம்: விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டின் ஆரம்பத்தில், உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டக ராசியில் சஞ்சரித்த குரு பகவான், சித்திரை 28-ம் (11-05-2025) தேதியிலிருந்து, மிதுன ராசிக்கு மாறி, சுப பலம் பெறுகிறார். மிதுனம், உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய, புத்திர ராசியாகும். மிதுனத்தில் நிலைகொண்டுள்ள குரு பகவான், 9-ம் பார்வையாக உங்கள் ஜென்ம ராசியில் நிலைகொண்டுள்ள சனி பகவான் மற்றும், ராகுவினால் ஏற்படும் தோஷத்தை, தனது சுபப் பார்வையினால், நீக்கிவிடுகிறார். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சக்திக்கு மீறிய செலவுகள் கட்டுப்படும். அலைச்சலும், வீண் கவலைகளும் குறையும்.
உத்தியோகம்: சித்திரை 28-ம் தேதி (11-5-2025) யிலிருந்து, புரட்டாசி 21 (7-10-2025) வரை குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதால், வேலைபார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பல பிரச்னைகள் நல்லபடி தீரும். சக-ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உங்களைக் கண்டாலே, முகத்தைச் சுளித்துக்கொள்ளும் மேலதிகாரி ஒருவர் வேறு இடத்திற்கு மாற்றலாகிச் சென்றுவிடுவதால்், அன்றாடப் பணிகளில் ஏற்பட்டிருந்த அச்சமும், அவ நம்பிக்கையும் தீரும். புதிதாக வேலைக்கு முயற்சிக்கும் கும்ப ராசி அன்பர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். புரட்டாசி 22-ம் (08-10-2025) தேதியிலிருந்து குரு பகவான், கடகத்திற்கு மாறிவிடுவதால், அன்றிலிருந்து, பணிகளில் கவனமாக இருத்தல் நல்லது. மேலதிகாரிகளுடன் சற்று அனுசரித்து நடந்துகொண்டால் போதும்.
தொழில், வியாபாரம்: விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டிலிருந்து, புரட்டாசி 21-ம் (7-10-2025)தேதி வரை, குரு பகவான் சிறந்த சுப பலத்தைப் பெற்று, லாப ஸ்தானத்தைப் பார்வையிடுவதால், தொழிலில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். லாபம் உயரும். தொழிற்சாலையை ஓரளவு விஸ்தரித்துக் கொள்ளலாம். புதிய விற்பனைக் கிளைகள் ஆரம்பிப்பதற்கும் கிரக நிலைகள் பக்கபலமாக இருக்கின்றன. ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலுள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
கலைத் துறையினர்: கலைத் துறைக்கு அதிகாரம் படைத்த கிரகங்கள் அனைவரும், ஐப்பசி 5-ம் (22-10-2025) தேதியிலிருந்து, சுப பலம் பெற்று வலம் வருகின்றன. வருட ஆரம்பத்திலிருந்து ஐப்பசி 4-ம் (21-10-2025) வரை, நல்ல வாய்ப்புகளுக்காக அலைய வேண்டிவரும். சங்கீத வித்வான்கள், பரத நாட்டியக் கலைஞர்கள் ஆகியோர், சங்கீத சபாக்களின் பிரமுகர்களைத் தேடி அலையவேண்டியிருக்கும். ஒரு சிலருக்கு, வெளிநாடு சென்று, அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும், அவற்றின் மூலம் வருமானம் உயர்வும் கிடைக்கும் என சுக்கிரனின் நிலை எடுத்துக்காட்டுகிறது. சிறிது முயற்சி வேண்டும் என்பதையும் கிரக நிலைகள் வற்புறுத்துகின்றன.
அரசியல் துறையினர்: தமிழ்ப் புத்தாண்டின் ஆரம்பத்திலிருந்து, ஐப்பசி முடியும் வரையில், கட்சி நடவடிக்கைகளில் மந்த நிலை நிலவும். கார்த்திகை 1-ம் தேதியிலிருந்து, அரசியல் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் பலம் பெறுவதால், கட்சியில் புதிய வேகம் ஏற்படும். எதிர்க்கட்சிகளிடமிருந்து, உங்களுக்கு அழைப்பும், வற்புறுத்தலும் வருவதால், மனதில் சபலம் ஏற்படும். சற்று சிந்தித்து, சரியான முடிவெடுப்பது உங்கள் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்குக் கைகொடுக்கும். அவசர முடிவுகளினால், தவறான முடிவெடுப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
மாணவ – மாணவியர்: இப்புத்தாண்டு முழுவதும், கல்வி முன்னேற்றம் சீராக இருக்கும். பின்னடைவோ அல்லது பாதிப்போ ஏற்படாது என்பதையும் கிரக நிலைகள் உறுதி செய்கின்றன. வெளிநாடு சென்று, உயர் கல்வி பயில விருப்பமிருப்பின், விசா கிடைப்பதில், பிரச்னைகள் ஏற்படக்கூடும். திட்டமிட்டு, முன்கூட்டியே முயற்சி செய்தல் நல்லது.
விவசாயத் துறையினர்: தமிழ்ப் புத்தாண்டின் ஆரம்பத்திலிருந்து, ஐப்பசி மாதம் முடியும் வரையில், கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக உள்ளனர். தேவையான அளவிற்கு தண்ணீர் வசதி கிடைக்கும். கால்-நடைகள் இவ்வருடம் நல்ல அபிவிருத்தியடையும் என்பதை இப்புத்தாண்டின், ராஜாவும், அர்க்காதிபதியும், மேகாதிபதியுமான, சூரிய பகவானின் சஞ்சார நிலைகள் உறுதி செய்கின்றன. மேலும், சித்திரை 28-ம் (11-05-2025) தேதியிலிருந்து, மிதுன ராசிக்கு மாறும் குரு பகவான், தனது 9-ம் பார்வையாக, கும்ப ராசியிலுள்ள சனி பகவானையும், ராகுவையும் பார்ப்பதால், நல்ல விளைச்சலும், சந்தையில் லாபமும் கிைடக்கும். பழைய கடன்களை அடைத்து, நிம்மதி பெற ஏற்ற காலகட்டமிது!
பெண்மணிகள்: புரட்டாசி 21-ம் (7-10-2025) தேதி வரை குரு பகவான் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கிறார். குடும்ப வாழ்க்கையில், மகிழ்ச்சியும், மன நிறைவும் ஏற்படும். குழந்தைகளின் கல்வியில் ஏற்படும் முன்னேற்றம் மன நிறைவையளிக்கும். திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, இத்தமிழ்ப் புத்தாண்டில் நல்ல வரன் அமையும். கும்ப ராசியில் பிறந்துள்ள, திருமணமான பல பெண்மணிகளுக்கு குருவின் சுபப் பார்வை பலத்தினால், குழந்தை பாக்கியம் கிட்டும். சுக்கிரனைவிட, குரு பகவானே அதிக சுப பலம் கொண்டு திகழ்வதால், இப்புத்தாண்டில், ஆண் குழந்தைகளே அதிகமாகப் பிறக்கும் (ஆதாரம்: “பிருஹத் ஸம்ஹிதை” மற்றும் “பூர்வபாராசர்யம்” ஆகிய மிகப் பழைமையான ஜோதிடக் கிரந்தங்கள்.
அறிவுரை: ஜென்ம ராசியில், சனி – ராகு கூட்டுச் சேர்க்கை உள்ளதால், சனிக்கிழமைகளில் ஆலய தரிசனம் தோஷத்தைப்போக்கும். ஒவ்வொரு புராதன ஆலயத்திலும், கருவறைக்குக் கீழ் சுமார் 48 அடி ஆழத்தில், சக்திவாய்ந்த யந்திரங்கள் மந்திரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
பரிகாரம்: சனிக்கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலை நேரத்தில் (சந்தியாக் காலம்) நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வருவது தன்னிகரற்ற பரிகார பலனையளிக்கும். இதை அனுபவத்தில் காணலாம்.
- லிகித ஜெபமாகிய ஸ்ரீராமஜெயம் எனும் மந்திரத்தை நோட்டுப் புத்தகத்தில் தினமும் 1008 முறை எழுதி நமஸ்கரிக்கவும்.