(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
15-5-2025 முதல் 14-6-2025 வரை
குடும்பம்: ஜென்ம ராசியில் செவ்வாய் நீச்சம் பெற்று சஞ்சரிக்கும் இம்மாதத்தில், குரு பகவானும், விரய ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ளார். வைகாசி 17-ம் (31-5-2025) தேதியிலிருந்து, சுக்கிரனும் அனுகூலமற்ற நிலைக்கு மாறிவிடுகிறார். மாத ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு, செலவு செய்வது அவசியம். அஷ்டம ஸ்தானத்தில் சனி – ராகு இணைந்திருப்பதால், உடல் நலனிலும் கவனமாக இருத்தல் நல்லது. சிறு உடல் உபாதை எனத் தோன்றினாலும், உடனடியாக மருத்துவரை அணுக, அவரது ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியம். கூடியவரையில் வெயிலில் அலைவதையும் வெளியூர்ப் பயணங்களையும் தவிர்த்தல் வேண்டும். திருமண முயற்சிகளில் கவனமாக இருத்தல் நல்லது. ஏனெனில், அவசர முடிவுகளினால், தவறான வரனை நிச்சயித்துவிடக்கூடிய வாய்ப்பு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வெளியூர்ப் பயணங்களின்போது, பொருட்களையும், அலுவலக ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது முக்கியம். நெருங்கிய உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்படுவதைத் தவிர்த்தல் அவசியம்.
உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு அதிபதியான சனி பகவான் (ஜீவன காரகர்), ராகுவுடன் சேர்ந்து, அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், அன்றாடப் பொறுப்புகளில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். எக்காரணத்தைக் கொண்டும், மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். சக-ஊழியர்களுடன் அலுவலகப் பிரச்னைகளை விவாதிக்காமல் இருப்பது நல்லது. புதிய வேலைக்கு முயற்சிக்கும் கடகராசி அன்பர்கள், இடைத் தரகர்களை நம்பி பணத்தை இழந்துவிட வேண்டாம். ஒரு சிலருக்கு, இடமாற்றம் அல்லது பதவி மாற்றம் ஏற்படக்கூடும். ஒப்புக்கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது.
தொழில், வியாபாரம்: சந்தையில், கடினமான போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். முன்கூட்டியே சந்தை நிலவரத்தை விசாரித்து அறிந்து, உங்கள் சரக்குகளின் விற்பனை விலைகளை நிர்ணயித்துக் கொள்வது, நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். புதிய முதலீடுகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும். சகக் கூட்டாளிகளுடன் சற்று அனுசரித்து, நடந்துகொள்வது, அவசியம்.
கலைத் துறையினர்: ஜீவன காரகரான சனி பகவான், ராகுவுடன் சேர்ந்து, 8-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், வாய்ப்புகள் குறையக்கூடும். அதன் காரணமாக, வருமானமும் பாதிக்கப்படும். கையிலுள்ளதை வைத்து, செலவுகளைச் சமாளிக்க வேண்டிய மாதம் இது என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. சிக்கனமாக இருத்தல், உங்கள் எதிர்கால நலனிற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறையை தங்கள் அதிகாரத்தில் கொண்டுள்ள கிரகங்கள் வைகாசி 16-ம் (30-5-2025) தேதி வரையில்தான், அனுகூலமாக சஞ்சரிக்கின்றன. வைகாசி,
17-ம் தேதியிலிருந்து, மேலிடத் தலைவர்களுடன் பழகுவதில் நிதானமும், எச்சரிக்கையும் அவசியம். கட்சித் தொண்டர்களுடன் பழகுவதிலும், அளவோடு இருத்தல் நல்லது. கிரக நிலைகளின்படி, வீண் பழி ஏற்பட்டு, உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. எத்தகைய தருணங்களில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் உன்னதக் கலை, “ஜோதிடம்” ஆகும்.
மாணவ – மாணவியர்: கல்வித் துறையுடன் தொடர்புள்ள, கிரகங்கள் ஓரளவே அனுகூலமாக சஞ்சரிக்கின்றன. படிப்பில் ஆர்வம் குறையும். புத்தகத்தைக் கையில் எடுத்தாலே, உறக்கமும், சோர்வும் மேலிடும். பிற மாணவர்களுடன், அளவிற்கு மீறி நெருங்கிப் பழக வேண்டாம். சகவாச தோஷம் உங்கள் கல்வி முன்னேற்றத்தைப் பாதிப்பதற்கு வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையுடன் தொடர்புள்ள கிரகங்கள், இம்்மாதம் முழுவதும், ஓரளவே அனுகூலமாக உள்ளன. வயல் பணிகளில், உழைப்பு கடினமாக இருக்கும். அதிக வெயிலினால், உடலில் சோர்வு ஏற்படும். கால்நடைகளின் பராமரிப்பில், செலவுகள் அதிகரிக்கும்.
பெண்மணிகள்: குடும்ப நிர்வாகத்தில், பிரச்னைகள் ஏற்படும். நெருங்கிய உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதமும், கருத்துவேற்றுமையும் ஏற்பட்டு, கவலையை அளிக்கும். அஷ்டம ஸ்தானத்தில் சனி – ராகு இணைந்திருப்பதால், அடிக்கடி ஏதாவதொரு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணம் கிட்டும். ஜீவன காரகரான சனி பகவான், ராகுவுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால், வேலைக்குச் சென்று-வரும் பெண்மணிகள், தங்கள் பணிகளில் கவனமாக இருத்தல் அவசியம். சக-ஊழியர்களுடன், தங்கள் சொந்தப் பிரச்னைகள் பற்றி, விவாதிக்காமலிருப்பது, நல்லது. பிறரால், பிரச்னை ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
அறிவுரை: அஷ்டம ஸ்தானத்திற்கு சனி – ராகுவினால், தோஷம் ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல், வெயிலில் அலைய வேண்டாம். வாகனம் ஓட்டுவதிலும் நிதானம் வேண்டும்.
பரிகாரம்: திருநாகேசுவரம், திருநள்ளாறு, காளஹஸ்தி, திருப்பாம்புரம் திருத்தல தரிசனம் உடனடி பலனளிக்கும்.
அனுகூல தினங்கள்
வைகாசி : 3-5, 9-11, 15-17, 22-24, 28-31.
சந்திராஷ்டம தினங்கள்
வைகாசி : 6 முதல், 8 காலை வரை.