(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
15-5-2025 முதல் 14-6-2025 வரை
குடும்பம்: தன ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருக்கும் இத்தருணத்தில், பாக்கிய ஸ்தானத்தில் சனிபகவானும், ராகுவும் இணைந்துள்ளனர்! லாப ஸ்தானத்தில், சுக்கிரனும், சுப பலம் பெற்றுள்ளதால், இம்மாதம் முழுவதும் பணப் பற்றாக்குறை இராது. திட்டமிட்டு செலவு செய்தால், சேமிப்பிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. குடும்பத்தில், அமைதி நிலவும். சுப நிகழ்ச்சிகள் ஏற்படுவதால், சுபச் செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். ஆயினும், சமாளிப்பதில் பிரச்னை ஏதும் இராது. திருமண முயற்சிகளுக்கு, ஏற்ற மாதம் இது. ஜென்ம ராசியில், சூரியன் சஞ்சரிப்பதால், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். கூடியவரையில், வெளியில் அலைவதைக் குறைத்துக் கொள்வது அவசியம்.
உத்தியோகம்: ஜீவன ஸ்தானத்தில் ஜீவன காரகரான சனி பகவான், ராகுவுடன் இணைந்திருப்பதால், பொறுப்புகளும், பணிச் சுமையும் அதிகமாக இருக்கும். ஆயினும், அதற்குத் தகுந்த ஊதியமும் கிடைக்கும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. வெளிநாடு சென்று, பணியாற்ற ஆர்வமிருப்பின், இம்மாதம் அதற்கான பூர்வாங்்க முயற்சிகளில் இறங்கலாம். வெற்றி கிட்டும். தற்காலிகப் பணிகளில் உள்ள அன்பர்களுக்கு, வேலை நிரந்தரமாகும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிட்டும்.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையும், சனி பகவானின் கைகளில்தான் உள்ளது. உற்பத்தியை, தைரியமாக அதிகரித்துக் கொள்ளலாம். சந்தை நிலவரம் சாதகமாக இருக்கும். புதிய விற்பனை நிலையங்கள் திறப்பதற்கும் சாதகமான மாதமாகும் இந்த வைகாசி! நிதி நிறுவனங்கள் ஒத்துழைக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாட்டிலுள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களுடன் புதிய, லாபகரமான ஒப்பந்தம் கையெழுத்தாகும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக வெளிநாடு சென்று-வரும் வாய்ப்பும் கிட்டும்.
கலைத் துறையினர்: கலைத் துறை, சுக்கிரனின் அதிகாரத்தில்தான் உள்ளது. சனி மற்றும் ராகு, புதன் ஆகியோருக்கும், இத்துறையில் பங்கு உண்டு என “பூர்வ பாராசர்யம்” என்னும் மிகப் புராதனமான ஜோதிட நூல் விவரித்துள்ளது. சனி பகவானும், ராகுவும் அனுகூலமாக சஞ்சரிப்பதால், லாபகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். ஒருசிலருக்கு, வெளிநாடு சென்று, அங்கு நிகழும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் கிட்டும். அதனால், வருமானம் உயரும். புதிதாக, திரைப்படத் துறையில் கால்பதிக்க விருப்பமிருப்பின், இம்மாதம் முயற்சிக்கலாம்.
அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு அதிகாரம் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும், சாதகமாக சஞ்சரிப்பதால், கட்சியில் ஆதரவு பெருகும். தொண்டர்கள் மத்தியில், செல்வாக்கு அதிகரிக்கும். உயர்மட்டத் தலைவர்கள், உங்களிடம் நம்பிக்கை வைப்பார்கள். சிலரிடம் முக்கிய கட்சிப் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.
மாணவ – மாணவியர்: புதன் உள்ளிட்ட மற்ற கிரகங்களும், ஆதரவாகவே சஞ்சரிப்பதால், கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பாடங்களில் மனம் ஆர்வத்துடன் ஈடுபடும். நல்ல பழக்க – வழக்கங்கள் கொண்டு்ள்ள சக-மாணவர்களுடன் நட்பு ஏற்படும். விடுதிகளில் தங்கி, கல்வி பயின்றுவரும் மாணவ – மாணவியருக்கு, வசதிகள் பெருகும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு முக்கிய பொறுப்பேற்றுள்ள கிரகமான செவ்வாய், கடக ராசியில் பலம் குறைந்துள்ளதால், வயல் பணிகள் சற்று கடுமையாக இருக்கும். கடும் வெயிலில் உழைக்க நேரிடும். ஆயினும், உழைப்பிற்கேற்ற விளைச்சலும், வருமானமும் கிடைப்பதால், மனதில் மகிழ்ச்சியும், மன-நிறைவும் கிட்டும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, உங்கள் பொருளாதாரத்தைச் சீர்செய்துகொள்ள வாய்ப்பளிக்கும் மாதம் இது! கால்நடைகள் சிறந்த முன்னேற்றமடையும்.
பெண்மணிகள்: சுக்கிரன் மற்றும் குரு ஆகிய இருவரும் அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும்! குடும்பப் பொறுப்புகளை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, நிம்மதியையும், மன-நிறைவையும் அளிக்கக்கூடிய மாதம் ஆகும், இந்த வைகாசி!! திருமணமான பெண்மணிகள், கருத்தரிப்பதற்கு ஏற்றபடி அமைந்துள்ளன கிரக நிலைகள். கருவுற்றுள்ள பெண்மணிகளுக்கு, சுகப் பிரசவம் உறுதி! வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, பணிச் சுமை சற்று அதிகமாக இருப்பினும், அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால், மனதில் நிறைவு ஏற்படும்.
அறிவுரை: அதிக அலைச்சலையும், கடின உழைப்பையும், வெயிலில் அலைவதையும் தவிர்ப்பது அவசியம்.
பரிகாரம்: திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, திருநாகேசுவரம் திருத்தல தரிசனம் மிகச் சிறந்த பரிகாரங்களாகும். செல்லும்போது, தீபத்தில் தவறாது சிறிது எள்-எண்ணெய் சேர்த்துவரத் தவறாதீர்கள்! இயலாதவர்கள், உங்கள் வீட்டுப் பூஜையறையிலேயே, சனிக்கிழமைகளில், மாலை வேளையில் கூடுதலாக எள் எண்ணெய் தீபம் ஏற்றிவந்தால் போதும். இந்தப் பரிகாரம் ராகுவினால் ஏற்படும் தோஷத்திற்கும், போதுமானதாகும்.
அனுகூல தினங்கள்
வைகாசி : 4-7, 11-14, 18-21, 25-27, 31.
சந்திராஷ்டம தினங்கள்
வைகாசி : 1 பிற்பகல் முதல், 3 இரவு வரை. மீண்டும், 28 இரவு முதல், 30 வரை.