(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
17-9-2024 முதல் 17-10-2024 வரை
குடும்பம்: நிதி நிலைமை இம்மாதம் முழுவதும் திருப்திகரமாக உள்ளது. லாபஸ்தானத்தில் ஏற்பட்டுள்ள சூரியன், சுக்கிரன் சேர்க்கை, அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது!! எதிர்பாராத பண வரவிற்கு சாத்தியக்கூறு உள்ளது. சப்தம ஸ்தானத்திலுள்ள குரு, குடும்பத்தில் நிலவும் அந்நியோன்யத்தையும், மகிழ்ச்சியான சூழ்நிைலகளையும் எடுத்துக்காட்டுகிறது. மேலும், ராசிக்கு குரு பகவானின் சுபப் பார்வை கிட்டுவதும் மேலும் பல நன்மைகளைக் குறிக்கிறது. அர்த்தாஷ்டகத்தில் சனி பகவானும், அஷ்டமத்தில் (8-ம் இடத்தில்) செவ்வாயும் அமர்ந்திருப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். கூடியவரையில், தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்ப்பது நல்லது. பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் ராகு நிற்பதால், குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளுக்கு, சாதகமான மாதமாகும் இப்புரட்டாசி!!
உத்தியோகம்: சற்று சிரமமான மாதமாகும், வேலைக்குச் சென்றுவரும் விருச்சிக ராசி அன்பர்களுக்கு! ஜீவன காரகரான சனி பகவான் அனுகூலமாக இல்லை!! வேலைச் சுமையும், பொறுப்புகளும் சக்திக்கு மீறியதாக இருக்கும். நியாயமாக உங்களுக்குக் கொடுக்கவேண்டிய ஊதிய உயர்வு, மேலும் தாமதப்படும். மேலதிகாரிகளுடன் பழகுவதில் அதிஜாக்கிரதையாக இருத்தல் அவசியம். சக-ஊழியர்கள் எவரையும் முழுமையாக நம்பிவிடவேண்டாம். அவர்கள் சொந்தப் பிரச்னைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமலிருப்பது, தேவையற்ற பிரச்னைகளில் நீங்கள் சிக்கிக்கொள்ளாமலிருக்க உதவும்.தொழில், வியாபாரம்: போட்டிகள் கடுமையாக இருப்பினும், உங்கள் விற்பனையையும், லாபத்தையும் அவை பாதிக்காது! இருப்பினும், உங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டி வரும். அளவோடு புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வெளி மாநிலங்களில் உங்கள் சரக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், லாபம் படிப்படியாக உயர்வதைக் காணலாம். ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் துறையினருக்கு, மிகச் சிறந்த முன்னேற்றம் காத்துள்ளது. வெளிநாடுகளிலுள்ள வர்த்தக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பதை குரு, சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சஞ்சார நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசாங்க ஆதரவும், தக்க தருணங்களில் கைகொடுக்கும்.
கலைத் துறையினர்: கலைத் துறைக்கு அதிகாரம் கொண்ட சுக்கிரன், புதன் ஆகிய இருவரும் சிறந்த சுப பலம் பெற்று விளங்குவதால், வருமானம் உயரும். எதிர்பாரா இடங்களிலிருந்து, புதிய வாய்ப்புகள் தேடி வரும். சினிமாத் துறையினருக்கு, மிகவும் அனுகூலமான மாதம் இது! திரைப்படத் தயாரிப்பாளர்கள் துணிந்து புதிய படங்களில் முதலீடு செய்யலாம். விநியோகஸ்தர்களுக்கு, நல்ல லாபம் கிடைக்கும் என்பதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன. புதிதாக சினிமாத் துறையில் கால்பதிக்க விரும்பும் விருச்சிக ராசியினருக்கு, வெற்றி கிட்டும்.
அரசியல் துறையினர்: அரசியல் பிரமுகர்களுக்கு, ஆதரவாக அமைந்துள்ளன சம்பந்தப்பட்ட கிரகங்கள். கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் மீது வழக்குகள் இருப்பின், சாதகமான தீர்ப்பு கிடைப்பது உறுதி. ஒரு சிலர் வெளிநாடு சென்று வரும் சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அதிக அலைச்சலை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாயும், அர்த்தாஷ்டக நிலையில் சனி பகவானும் சஞ்சரிக்கின்றனர். இத்தகைய கிரக நிலைகள் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும்.
மாணவ – மாணவியர்: கல்விக்கு அதிபதியான புதன், சிறந்த சுப பலம் பெற்றுத் திகழ்கிறார். குரு பகவானும், ஆதரவாக துணை நிற்கிறார். ஆதலால், பாடங்களில் மனம் ஆர்வத்துடன் ஈடுபடும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ்வீர்கள். உயர்கல்விக்கு உங்கள் விருப்பம்போல் இடம் கிடைக்கும். வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி கற்பதற்கு ஆர்வமிருப்பின், தற்போது முயற்சிக்கலாம். இடமும் அவசியமான விசாவும், கல்விக் கடனுதவியும், எளிதில் கிட்டும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு அதிபதியான செவ்வாய், உங்களுக்கு ஆதரவாக இல்லை! இருப்பினும், சூரியனும், சுக்கிரனும் உதவிகரமான நிலைகளில் வலம் வருகின்றனர். வயல் பணிகள் சற்று கடினமாக இருக்கும். உழைப்பின் காரணமாக, ஆரோக்கியம் பாதிக்கப்படும். இருப்பினும், உழைப்பிற்கேற்ற விளைச்சலும், வருமானமும் கிடைப்பது மனத்திற்கு உற்சாகத்தைத் தரும். சுக்கிரனின் நிலையினால், ஒருசிலருக்கு சொந்த விளைபூமி வாங்கும் யோகமும் உள்ளது.
பெண்மணிகள்: அனைத்து கிரகங்களும் உங்களுக்கு உதவிகரமாக இம்மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால், மகிழ்ச்சியும், மன நிறைவும் உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் திகழும் சூழ்நிலை, உற்சாகத்தையளிக்கும். சப்தம ஸ்தானத்தில் குரு ஆதரவாக இருப்பதால், கணவரின் அன்பும், அரவணைப்பும் மனத்திற்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தரும். செவ்வாயின் அஷ்டம ஸ்தான நிலை, கடின உழைப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
அறிவுரை: ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். குழந்தைகளின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்துங்கள்.
பரிகாரம்: ராகு, சனி மற்றும் செவ்வாய் ஆகிய மூவருக்கும் பரிகாரம் செய்தல் அவசியம். அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்கு சனி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் தவறாது சென்று, தீபத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துவிட்டு தரிசித்துவிட்டு வந்தால் போதும். ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் மகத்தான பரிகார சக்தி உள்ளது. இதை அனுபவத்தில் காண்பீர்கள்!
அனுகூல தினங்கள் புரட்டாசி: 1, 2, 6, 7, 11-16, 20, 24-26, 30, 31.
சந்திராஷ்டம தினங்கள்: 8 மாலை முதல் 10 இரவு வரை.