(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)
15-5-2025 முதல் 14-6-2025 வரை
குடும்பம்: உங்கள் ராசிக்கு நாதனாகிய சுக்கிரன், இம்மாதம் முழுவதும் அனுகூலமாக இல்லை! இதற்கு மாறாக, மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், பாக்கிய ஸ்தானத்தில் சிறந்த சுப பலத்துடன் நிலைகொண்டுள்ளதோடு, உங்கள் ஜென்ம ராசியையும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்ப்பது, சிறந்த யோக பலன்களைக் குறிக்கிறது. “குரு பார்வை கோடி தோஷத்தைப் போக்கும்….!” என்பது ஆன்றோர்கள் வாக்காகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். திருமணமான பெண்மணிகளுக்கு, குழந்தை பாக்கியம் கிட்டும். ஒரு சிலருக்கு, வசதியான வீட்டிற்கு மாற்றம் ஏற்படும். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குரு பகவானின் பார்வை கிடைப்பதால், செல்வதற்கரிய தீர்த்த, தல யாத்திரை ஒன்று கிடைப்பதற்கும் நல்ல வாய்ப்புள்ளது.
உத்தியோகம்: ராசிக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய கும்ப ராசியில் இணைந்துள்ள சனி பகவான் மற்றும் ராகுவை, குரு பகவான் பார்ப்பது, பிரபல யோகங்களில் ஒன்று என்று கூறுகிறது, “ஜோதிடக் கலை!” பலருக்கு, பதவியுயர்வு கிடைக்கும். சிலருக்கு, ஊதிய உயர்வையும் எதிர்பார்க்கலாம். வெளிநாடு சென்று, வேலை பார்த்து, பணம் ஈட்டவேண்டும் என்ற விருப்பமிருப்பின், இம்மாதம் முயற்சிக்கலாம். ஏற்கெனவே, வெளிநாடுகளில் வேலை பார்த்துவரும் துலாம் ராசியினருக்கு, நிரந்தரக் குடியுரிமை கிடைக்கும்.
தொழில், வியாபாரம்: தொழில் துறைக்கு, அதிபதியான சனி பகவான், ராகுவுடன் சேர்ந்து, உங்கள் ராசிக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய கும்ப ராசியில் சஞ்சரிப்பது, சிறந்த தொழில் மேன்மையையும், அபிவிருத்தியையும், லாபத்தையும் குறிக்கின்றது. சந்தை நிலவரம் சாதகமாக அமையும். போட்டிகள் அனைத்திலும், முறியடித்து, லாபம் பெறும் திறமையை இவ்விரு கிரகங்களும் அளித்தருள்கிறார்கள். புதிய விற்பனைக் கிளைகளைத் திறப்பதற்கு ஏற்ற மாதம் இந்த வைகாசி! நிதிநிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முதலீடுகளில் துணிந்து இறங்கலாம்.
கலைத் துறையினர்: கலைத் துறையை, தனது அதிகாரத்தில் கொண்டுள்ள சுக்கிரன், வைகாசி 17-ம் (31-5-2025) தேதியிலிருந்து, சுப பலம் பெறுவதால், புதிய வாய்ப்புகள் அதிக முயற்சியின்றிக் கிடைக்கும். வருமானம் உயரும். தற்போதைய தசையும், புக்தியும் சாதகமாக இருப்பின், வெளிநாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும், அவற்றின் காரணமாக, வருமான உயர்வும் மகிழ்ச்சியை அளிக்கும். ரசிகர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். சங்கீத சபா நிர்வாகிகள், உங்களைத் தேடி வருவார்கள். பல மாதங்களாகப் பின்னடைவையே சந்தித்துவந்த, திரைப்படத் துறையினருக்கு, புத்துயுர் அளிக்கும் மாதம் ஆகும் இந்த வைகாசி. திரைப்படத் தயாரிப்பாளர்கள், சிறு முதலீட்டில் தரமான படங்களை எடுத்து, லாபம் அடைவார்கள். கர்நாடக சங்கீத வித்வான்கள், பரதநாட்டியக் கலைஞர்கள், திரைப்படப் பின்னணிப் பாடகர்கள், திருக்கோயில் ஓதுவா மூர்த்திகள் ஆகியோருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். பரதநாட்டிய வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு உதவிகரமாக நிலைகொண்டுள்ளார், சுக்கிரன்! இந்த அரிய வாய்ப்பினை, கலைத் துறை அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசியல் துறையினர்: இம்மாதம் முழுவதும், அரசியல் துறையுடன் தொடர்புள்ள கிரகங்கள் சுப பலம் பெற்று, சாதகமாக வலம் வருகின்றன. அரசியல் தொடர்புகள், உற்சாகத்தையளிக்கும். கட்சித் தலைவர்கள், உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், ஆதரவு பெருகும். ஒரு சிலருக்கு, கட்சி மாற்றமும் ஏற்படக்கூடும் என்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. அவரவர்களின் தனிப்பட்ட ஜனன ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தால், இது தெரியவரும்.
மாணவ – மாணவியர்: வைகாசி 18-ம் (1-6-2025) தேதி வரை கிரக நிலைகள் உங்களுக்கு உதவிகரமாக அமைந்துள்ளன. படிப்பில் ஆர்வம் மேலிடும். நினைவாற்றல் அதிகரிக்கும். கிரகிப்புத் திறன் ஓங்கும். வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பெறவேண்டுமென்ற விருப்பமிருப்பின், அதற்கான பூர்வாங்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆசிரியர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும், வழிகாட்டுதல்களும் எளிதில் கிட்டும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு அதிகாரம் பெற்றுள்ள கிரகங்கள் ஓரளவே அனுகூலமாக சஞ்சரிக்கின்றன. கிரக நிலைகளின்படி, தண்ணீர்ப் பற்றாக்குறை இருப்பதற்கு வாய்ப்பில்லை! அதிக வெயிலினால், தண்ணீர் வரத்து சற்று பாதிக்கப்பட்டாலும், பயிர்கள் பாதிக்கப்படும் அளவிற்கு பற்றாக்குறை ஏற்படாது என்பதை கிரக நிலைகள் உறுதிசெய்கின்றன. எதிர்பார்ப்பைவிட, விளைச்சல் சிறிது குறைவாகவே இருக்கும் என்பதையும், கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. கால்நடைகளின் பராமரிப்பிலும், செலவுகள் அதிகமாக இருக்கும்.
பெண்மணிகள்: குரு, சுக்கிரன் ஆகிய இருவருமே மிகவும் அனுகூலமாக இம்மாதம் முழுவதும் வலம் வருகின்றன. குறிப்பாக, ராசிக்கு புத்திர ஸ்தானமாகிய, கும்ப ராசிக்கு குருவின் சுபப் பார்வை ஏற்படுவதால், திருமணமான பெண்மணிகளுக்கு, கருத்தரிக்க ஏற்ற மாதம் இந்த வைகாசி. வேலையில்லாத பெண்களுக்கு, சிறு முயற்சியிலேயே நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குடும்பச் சூழ்நிலை மன நிறைவைத் தரும்.
அறிவுரை: குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வி ஆகியவற்றில் கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: சனி மற்றும் ராகுவிற்கு பரிகாரம் செய்வது மிகவும் அவசியம். ஏழை ஒருவருக்கு சனிக்கிழமைகளில் எள் கலந்த (எள்ளோரை) உணவு அளிப்பது சிறந்த பரிகாரமாகும்.
அனுகூல தினங்கள்
வைகாசி : 1, 2, 8-11, 15-17, 22-24, 28-30.
சந்திராஷ்டம தினங்கள்
வைகாசி : 12 பிற்பகல் முதல், 14 மாலை வரை.