15-5-2023 முதல் 15-6-2023 வரை
உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை
குடும்பம்:
சனி, புதன், செவ்வாய் ஆகிய மூவரும் உங்களுக்கு ஆதரவாக உள்ளனர்! மற்ற கிரகங்களினால், எவ்வித அனுகூலத்தையும் எதிர்பார்க்க முடியாது!! வரவும் – செலவும் சரிசமமாகவே இருக்கும். மாதக் கடைசியில், பணப் பற்றாக்குறை சற்று கடுமையாகவே இருக்கக்கூடும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆரோக்கியத்திலும் சற்று கவனமாக இருக்க வேண்டிய மாதமாகும். குரு மற்றும் சுக்கிரனின் நிலைகளினால், நெருங்கிய உறவினர்களிடையே வாக்குவாதமும் ஒற்றுமைக் குறைவும் உங்கள் மன நிம்மதியைப் பாதிக்கும். பிரச்னையுடன் எழுந்து, பிரச்னையுடன் உறங்கச் செல்வது என்பது போன்று பல குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். திருமணமாகியிருந்த பெண்ணின் புகுந்த வீட்டுப் பிரச்னைகள் கவலை தரும். கணவர் – மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் குறையும். பழைய கடன்கள் கவலையை அளிக்கும். பரிகாரம் மிகவும் அவசியம். கீழே கூறியுள்ள பரிகாரங்கள் கடைப்பிடிப்பதற்கு எளிதானவை. ஆனால், பலனோ அளவற்றது.
உத்தியோகம்:
உத்தியோகத் துறைக்கு அதிகாரியான, சனி பகவான் மிகவும் அனுகூலமாக சஞ்சரிப்பதால், அலுவலகச் சூழ்நிலை உற்சாகத்தை அதிகரிக்கும். பலருக்கு, ஊதிய உயர்வு, பதவியுயர்வு, சலுகைகளுடன்கூடிய இடமாற்றம் ஆகியவை ஏற்படுவதற்கு சிறந்த சாத்தியக்கூறு உள்ளது. வேலையில்லாமல் அவதியுறும் கன்னிராசியினருக்கு, நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் அன்பர்களுக்கு, புதிய சலுகைகள் கிடைப்பது, பணிகளில் உற்சாகத்தை மேம்படுத்தும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தொழில், வியாபாரம்:
அதிக அலைச்சலும், கடின உழைப்பும், சந்தை நிலவரங்கள் அடிக்கடி மாறி, மாறி வரும் பிரச்னைகள் கவலையளித்தாலும், விற்பனையை அதிகரித்து, லாபம் உயர்வது, மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும். லாபம் அடிக்கடி வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனை சம்பந்தமாக சென்று வரவேண்டியிருக்கும். அதனால், உடல் ஓய்விற்குக் கெஞ்சும். புதிய விற்பனைக் கிளை திறப்பதற்கு அனுகூலமான மாதம் இந்த வைகாசி! அரசாங்்க ஆதரவும், தக்க தருணத்தில் கிடைக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
கலைத்துறையினர்:
கலைத் துறைக்கு அதிபதியான சுக்கிரனும், இதர கிரகங்களும் பலம் குறைந்திருப்பதால், சென்ற மாதம் ஏற்பட்ட முன்னேற்றம் இம்மாதம் சிறிது தடைப்படும். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் கிடைப்பதில், தடங்கல்கள் ஏற்படும். திரைப்படத் தயாரிப்பாளர்கள், மிகக் கடுமையான பணப் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டி வரும். நிதி நிறுவனங்களின் ஆதரவு குறையும். சினிமாத் துறையினர் தங்களது ஆடம்பரச் ெசலவுகளைக் குறைத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை உருவாகும். கலைத் துறைக்கே உரித்தான போட்டியும், பொறாமையும் அதிகரிக்கும். மறைமுகச் சூழ்ச்சிகள் உங்கள் நலனைக் கடுமையாகப் பாதிக்கும்.
அரசியல் துறையினர்:
இம்மாதம் முழுவதும், கிரக நிலைகள் உங்களுக்கு அனுகூலமாக இல்லை! கட்சியில் அனைவருடனும் அனுசரித்து நடந்துகொள்வது மிகவும் அவசியம். எத்தகைய சூழ்நிலையிலும் நிதானத்தை இழந்துவிடாமல், ஆக்கப்பூர்வமாகச்சிந்தித்துச்செயல்படுவது நல்லது.
மாணவ – மாணவியர்:
இம்மாதம் முழுவதும், வித்யா ஸ்தானமும், கல்விக்கு அதிபதியான புதனும் சுபபலம் பெற்றுள்ளதால், கல்வி முன்னேற்றம் நீடிக்கிறது. ேதர்வுகளில் தெளிவாகவும், மிகச் சரியாகவும் பதிலளிக்கும் திறனை அளித்தருள் புரிகிறார், புதன்! மனநிலை மிகத் தெளிவாகவே இருக்கும்.
விவசாயத் துறையினர்:
செவ்வாய், லாப ஸ்தானத்தில் நீடிப்பதால், விளைச்சலும் வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். கால் நடைகளின் பராமரிப்பில், பணம் விரயமாகும். பழைய கடன்கள் தொல்லை தரும். கடும் வெயிலில் உழைக்க வேண்டியிருப்பதால், அடிக்கடி ஏதாவது ஓர் உடல் உபாதை உடலை வருத்தும். மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. அண்டை நிலத்தவரோடு வாக்கு வாதமும், பகையுணர்ச்சியும் வேண்டாம்.
பெண்மணிகள்:
அஷ்டம ஸ்தானத்தில் ராகு நீடிக்கும் இம்மாதத்தில், குரு, சுக்கிரன் ஆகிய இருவருமே அனுகூலமாக இல்லை. குடும்பப் பிரச்னைகளால் மன நிம்மதி பாதிக்கப்படும். திருமண வயதிலுள்ள கன்னியருக்கு, வரன் அமைவது தாமதப்படும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, அனுகூலமான மாதமாகும்.
அறிவுரை:
ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். தேவையில்லாமல், வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.
பரிகாரம்:
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயிலில் உள்ள தீபத்தில் சிறிது பசு நெய் சேர்த்து வந்தால் போதும். ஒவ்வொரு துளி நெய்க்கும் கற்பனை செய்து பார்ப்பதற்கும் இயலாத அளவிற்கு பரிகாரப் பலன் கிடைக்கும். திருக்கோயிலில் முடியாவிட்டால், உங்கள் வீட்டிலுள்ள பூஜையறையில், வழக்கமாக எரியும் தீபத்தைத் தவிர்த்து, மேலும் ஒரு நெய் தீபம் ஏற்றிவருதல் பலன் அளிக்கக்கூடியது.
அனுகூல தினங்கள்:
வைகாசி: 1, 2, 6-10, 14-17, 22-24, 28-29.
சந்திராஷ்டம தினங்கள்:
வைகாசி: 3 காலை முதல், 4, 5 பிற்பகல் வரை. மீண்டும் 30 மாலை முதல், 32 இரவு வரை.