(15-6-2025 முதல் 16-7-2025 வரை)
(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)
குடும்பம்: வாக்கு, தனம் ஆகிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், வருமானம் போதிய அளவிற்கு இருக்கும்! பணப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. ஏழரைச் சனி நீடிப்பதால், உடல் நலனில் கவனம் வேண்டும். கூடிய வரையில் வீண் அலைச்சலையும், கற்பனையான கவலைகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். அர்த்தாஷ்டகத்தில், குரு பகவான் சஞ்சரிப்பதால், கணவர்-மனைவியரிடையே சிறு, சிறு கருத்துவேற்றுமைகள் ஏற்படக்கூடும். முக்கிய பிரச்னை ஒன்று நல்லபடியே தீரும். எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வரன் அமைவது, தாமதப்படும்.
உத்தியோகம்: விரய ஸ்தானத்தில், சனி – ராகு கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், வேலை பார்க்கும் இடத்தில், உழைப்பும், பொறுப்புகளும் சக்திக்கு மீறியதாக இருக்கும். “கொடுக்கும் கூலிக்கு” வேலை வாங்குவதில், சனிக்கு நிகர் அவரே!! புதிய வேலைக்கு முயற்சிக்கும் மீன ராசி அன்பர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். ஆயினும், நிபந்தனைகள் சற்று கடினமாகவே இருக்கும். வெளிநாடுகளில் வேலை பார்த்துவரும் மீனராசியினருக்கு, பணிச் சுமை சக்திக்கு மீறியதாக இருக்கும். சிலருக்கு இடமாற்றம் அல்லது இலாகா மாற்றம் ஏற்படும்.
தொழில், வியாபாரம்: சந்தையில், சற்று கடுமையான போட்டிகளைச் சமாளித்தே, விற்பனையையும், லாபத்தையும் தக்கவைத்துக் கொள்ள முடியும். புதிய முதலீடுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். முன்-பணம் இல்லாமல், கடனுக்கு சரக்குகளை அனுப்புவதைத் தவிர்த்தல் அவசியம் என்பதை கிரக நிலைகள் தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. நிதி நிறுவனங்கள் பிரச்னைகளை ஏற்படுத்தும். சகக் கூட்டாளிகள் ஒத்துழைக்க மறுப்பார்கள். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய பாக்கிகள் மேலும் தாமதப்படுவதால், நிதிப் பிரச்னை அதிகரிக்கும்.
கலைத் துறையினர்: நிச்சயமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் கைநழுவிப் போகும்! வருமானம் குறையும். மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில், ஒற்றுமை பாதிக்கப்படும். பணப்பற்றாக்குறை சற்று கடுமையாகவே இருக்கும். ஏழரைச் சனியின் பிடியிலுள்ளபோது, ராகுவும் சேர்ந்திருப்பது, பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கச் செய்யும். பரிகாரம் அவசியம் செய்ய வேண்டும்.
அரசியல் துறையினர்: பேச்சிலும், உயர்மட்டத் தலைவர்களுடன் உள்ள தொடர்புகளிலும், ஊடகங்களின் பேட்டிகளிலும் அதி ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய மாதம் இது!! கட்சியில், மறைமுக எதிர்ப்புகள் உருவாகிக் கொண்டிருப்பதை, கிரக நிலைகள் உணர்த்துகின்றன. மனதை வெறுப்பும், விரக்தியும் பாதிக்கும். வேறு கட்சிகளுக்கு தாவிவிடலாமா? என மனதில் போராட்டமே ஏற்படும்.
மாணவ – மாணவியர்: கல்வித் துறைக்குத் தொடர்புள்ள கிரகங்கள் அனுகூலமாக இல்லை! தக்க தருணத்தில் படித்தவை மறந்து போகும். புத்தகத்தைக் கையில் எடுத்தாலே, சோர்வும், அசதியும் மேலிடும். தேவையில்லாத, தவறான எண்ணங்கள் மனதைப் பாதிக்கும். தவறான பழக்க வழக்கங்கள் உள்ள சக-மாணவர்களுடன் சேர்க்கை ஏற்படும். தவிர்ப்பது அவசியம்.
விவசாயத் துறையினர்: வயலில் பணிகள் கடினமாக இருக்கும். தண்ணீர்ப் பற்றாக்குறை இராது. இருப்பினும், உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிடைப்பது கடினம். கால்நடைகளின் பராமரிப்பில் பணம் விரயமாகும். விதைகள், உரம் மற்றும் அதற்குண்டான இடுபொருட்களின் விலை மற்றும் தட்டுப்பாடும் உண்டாக்கி, மனத்தளவில் பாதிப்பு உண்டாகும். அதுவே நோய்கள் அண்டுவதற்குக் காரணகர்த்தாவாக மாறிப்போய்விடும். பழைய கடன்கள் கவலையை அளிக்கும்.
பெண்மணிகள்: உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய மாதம் இந்த ஆனி! அதிக உழைப்பு, குடும்பக் கவலைகள், குழந்தைகளின் கல்வி பற்றிய சிந்தனைகள் ஆகியவை உடல் நலனை மட்டுமின்றி, மனநலனையும் பாதிக்கக்கூடும் என கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. தேவையற்ற கவலைகளையும், கடின உடலுழைப்பையும் குறைத்துக் கொள்வது மிகவும் அவசியம். இல்லாவிடில், மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. நெருங்கிய உறவினர்களின் குடும்பப் பிரச்னைகள் உங்கள் மனதை வெகுவாகப் பாதிக்கக்கூடும். கூடியவரையில், உங்களை அவற்றில் ஈடுபடுத்திக்கொள்ளாமலிருப்பது அவசியம்.
அறிவுரை: உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சிறு உபாதையானாலும், அலட்சியமாக இராமல், உடனடியாக மருத்து வரை அணுகி, தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம் என கிரக நிலைகள் வலியுறுத்துகின்றன. எது வந்தபோதிலும், “இதுவும் கடந்து போகும்” என்கின்ற வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அனைத்து துன்பங்களும் தற்காலிகமானதே என்பதைப் புரிந்துகொண்டால், வாழ்க்கை இனிமையானதாக இருக்கும் கீழே கொடுத்துள்ள பரிகாரம் நல்ல பலனையளிக்கும். வீண் கவலைகளையும் தவிர்ப்பது அவசியம்.
பரிகாரம்: தினமும், ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம், ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம், ஸ்ரீ மீனாட்சி பஞ்ச ரத்னம், அபிராமி-அந்தாதி ஆகியவற்றைச் சொல்லிப் பூஜிப்பது கைமேல் பலனளிக்கும். இவற்றை செல் போனில் கேட்டாலும் நல்ல பலன் கிட்டும். தேவை ஒன்றுமட்டும்தான் அது, நம்பிக்கையுடன்கூடிய பக்தி மட்டுமே!
அனுகூல தினங்கள்:
ஆனி : 1, 2, 7-12, 16-19, 23-25, 29, 30.
சந்திராஷ்டம தினங்கள்:
ஆனி : 20 முதல் 22 மாலை வரை.