(15-6-2025 முதல் 16-7-2025 வரை)
(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: தன ஸ்தானத்தில், சனி – ராகு இணைந்திருப்பதால், கைப் பணத்தைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்! அலுவலக நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு உதவுவதற்காக பணம் கொடுத்து, ஏமாந்துவிட வேண்டாம்!! கொடுத்த பணம் திரும்பி வராது என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. கணவர் – மனைவியரிடையே கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். குடும்ப ஒற்றுமையையும், மன நிம்மதியையும் இது வெகுவாகப் பாதிக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், அனுசரித்தும் நடந்துெகாள்வது குடும்பத்திற்கு நன்மை செய்யும். வெளியூர்ப் பயணங்களின்போது, பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் களவுபோக நேரிடும். விழிப்புடன் இருங்கள். திருமண முயற்சிகளில் தவறான வரனை நிச்சயித்துவிட வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. எத்தகைய முடிவானாலும், தீர விசாரித்து, அதன் பின்பே வரனை நிர்ணயிக்க வேண்டும். எத்தகைய தருணங்களில், நாம் எந்தெந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக, எடுத்துக்காட்டும் ஒளிவிளக்கு “ஜோதிடம்” மட்டுமே!!
உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு அதிபதியான சனி பகவான், ராகுவுடன் வாக்கு ஸ்தானத்தில் இணைந்திருப்பதால், சக-ஊழியர்களுக்கு, வாக்குறுதி எதையும் கொடுத்துவிடாதீர்கள்! உங்களால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாது!! இக்கட்டான சூழ்நிலையில் அகப்பட்டுக் கொள்ள நேரிடும். மேலும், உங்கள் அன்றாடப் பொறுப்புகளில், கவனமாக இருத்தல் அவசியம் என்பதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. நிறுவனம் சம்பந்தமான முக்கிய விஷயங்களை, சக-ஊழியர்களுடன் விவாதிக்க வேண்டாம். மேலதிகாரிகளுடன் நெருங்கிப் பழகுவதையும், தவிர்த்தல் அவசியம். அவர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க நேரிடும்.
தொழில், வியாபாரம்: பண விஷயங்களில் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கிரக நிலைகள் எச்சரிக்கை விடுக்கின்றன. முன்-பணம் இல்லாமல், சரக்குகளைக் கடனுக்கு அனுப்ப வேண்டாம். ஏனெனில், அந்தப் பணம் திரும்ப வராது என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வெள்ளம் வரும் முன்பே, நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என ஜோதிடம் கூறுகிறது. நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பும், குறையக்கூடும். கைப் பணத்தைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை நாங்கள் வலியுறுத்துவதற்குக் காரணம், உங்கள் எதிர்கால நன்மை கருதியே!
கலைத் துறையினர்: வாய்ப்புகள் ஒரே சீராக வந்துகொண்டிருக்கும். இருப்பினும், வருமானம் மட்டும் எதிர்பார்க்கும் அளவிற்கு இராது! மாதத்தின் கடைசி வாரத்தில், பண நெருக்கடி ஏற்படக்கூடும். திட்டமிட்டு செலவு செய்தல், அவசியம் என்பதை கிரக நிலைகள் வற்புறுத்துகின்றன.
அரசியல் துறையினர்: சுக்கிரன் மட்டுமே ஓரளவு உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கின்றார், இம்மாதம் முழுவதும்! மற்ற கிரகங்களால், அனுகூலம் எதையும் எதிர்பார்க்க முடியாது!! கட்சியில், எதிர்ப்பு உருவாகிக் கொண்டுள்ளது. தக்க தருணத்தில், விழித்துக் கொள்ளுங்கள். பிரச்னை ஏற்படுவதற்கு முன்பே, செயல்படுவது நன்மை செய்யும்.
மாணவ – மாணவியர்: இம்மாதம் படிப்பில் கவனக் குறைவு ஏற்படக்கூடும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. சக-மாணவர்களுடன் வெளியில் செல்வது, பொழுதைக் கழிப்பது ஆகியவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். “கூடா நட்பு கேடாய் விளையும்…!” என்பது மூதோர் வாக்காகும். “நண்பர்கள்” என நம்பி, உங்கள் கல்வி முன்னேற்றத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது மிகவும் அவசியம்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையைத் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டுள்ள கிரகங்கள் அனுகூலமாக இல்லை! வயல் பணிகளின்போது – குறிப்பாக, இரவு நேரங்களில் விழிப்புடன் செயல்படுவது அவசியம். ஏனெனில், விஷஜந்துக்களாலும், பிற பிராணிகளினாலும் ஆபத்து நேரிடக்கூடும் என்பதை கிரக நிலைகள் தெளிவாக எச்சரிக்கை செய்கின்றன.
பெண்மணிகள்: உங்கள் செயல்களிலும், பேச்சுகளிலும், ஜாக்கிரதையாக இருப்பது, பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும் என கிரகங்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. அஷ்டம ராசியில், செவ்வாய் இருப்பதால், மாதவிடாய்க் கோளாறுகள், தலைச்சுற்றல், ஒற்றைத் தலைவலி, கை கால்களில் மூட்டு வலி, வயிற்றுவலி ஆகிய உபாதைகள் ஏற்படக்கூடும். ஓய்வெடுத்தல், எளிய மருத்துவச் சிகிச்சைஆகியவை கைகொடுக்கும்.
அறிவுரை: கூடிய வரையில், கடின உழைப்பையும், இரவில் காலங்கடந்து உறங்கச் செல்வதையும், வேளைகெட்்ட வேளைகளில் சாப்பிடுவது ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்: தினமும், காலையில் நீராடிய பின்பு, ÿதன்வந்திரி பகவானை மனதால் பூஜிப்பதும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், சனிக்கிழமைகளில், தீபத்தில் சிறிது எள் எண்ணெய் சேர்ப்பதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் என “பரிகார ரத்னம்” எனும் மிகப் பழமையான ஜோதிட நூல் கூறுகிறது.
அனுகூல தினங்கள்
ஆனி : 1, 2, 7-9, 12-14, 18-20, 24-26, 30, 31.
சந்திராஷ்டம தினங்கள்
ஆனி : 15 காலை முதல், 17 மாலை வரை.